Siren Movie Teaser : ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள "சைரன்" திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் இவ்வாண்டு வெளியாகவுள்ள நான்காவது திரைப்படமாக இது மாறி உள்ளது.
இன்று உலகெங்கிலும் தீபாவளி திருநாள் கொண்டாடப்படும் நிலையில் நேற்று ஜெயம் ரவியின் சைரன் திரைப்பட டீஸர் வெளியானது. பிரபல இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இந்த திரைப்படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, இரு வெவ்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள டீசரின்படி ஜெயம் ரவி சிறைச்சாலையில் இருந்து சுமார் 14 ஆண்டுகள் கழித்து பரோலில் வெளியே வருகிறார். அப்பொழுது அவருக்கு நடக்கும் சம்பவங்களின் கோர்வை தான் இந்த திரைப்படம் என்று கூறப்படுகிறது.
முன்னணி நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த ஆண்டு வெளியான அகிலன் மற்றும் இறைவன் ஆகிய இரு திரைப்படங்களும் நடிகர் ஜெயம் ரவி அவர்களுக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்காத நிலையில் சைரன் திரைப்படம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
அதேபோல இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அருள்மொழி வர்மனாக மிக கட்சிதமாக நடித்து மக்களின் ஆதரவை பெற்றார் ஜெயம் ரவி என்றால் அது மிகையல்ல. அதேபோல விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள கமல்ஹாசனின் 234வது திரைப்படமான "தக் லைப்" திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க உள்ளார் ஜெயம் ரவி. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்க இந்த திரைப்படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர்.