Birju Maharaj : கமலின் விஸ்வரூப நடனத்திற்கு வித்திட்டவர்!! புகழ்பெற்ற கதக் நடன கலைஞர் பிர்ஜு மஹராஜ் காலமானார்

By Ganesh PerumalFirst Published Jan 17, 2022, 8:31 AM IST
Highlights

இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் கலைஞனாக வலம் வந்த பிர்ஜு மஹராஜ் (Birju Maharaj) இன்று காலமானார். அவருக்கு வயது 83. 

கதக் நடனக் கலையில் தலைசிறந்து விளங்கியவர் பிர்ஜு மஹராஜ். இவரது திறமைக்காக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இவர் சிறந்த ட்ரம்ஸ் இசைக் கலைஞரும் கூட. இதுதவிர அவர் தபளா வாத்தியக் கருவியையும் நேர்த்தியாக வாசிக்கக் கூடியவர். மேலும் தும்ரி, தாத்ரா, பஜன், கஸல் போன்ற வடிவிலான பாடல்களை மிகச்சிறந்த முறையில் பாடக்கூடியவர்.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற உனைக் காணாத.. என்ற பாடல் மிகவும் பிரபலமானதற்கு அப்பாடலில் இடம்பெற்ற கதக் நடனம் ஒரு முக்கிய காரணம். அப்பாடலுக்கு கோரியோகிராஃப் செய்தவர் பிர்ஜு மஹராஜ் தான். அவரிடம் கதக் நடனம் கற்றுக்கொண்டதால் தான் நடிகர் கமல்ஹாசன், அந்த பாடலில் மிகவும் நேர்த்தியாக ஆடி அசத்தி இருந்தார். 

இவ்வாறு இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் கலைஞனாக வலம் வந்த பிர்ஜு மஹராஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 83. டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பிர்ஜு மஹராஜ், திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிர்ஜு மஹராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். அவரது திடீர் மரணம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

click me!