வீர மரணமடைந்த காவல் துறை ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி...!

First Published Dec 15, 2017, 4:08 PM IST
Highlights
karthi last respect for periyappandi funeral


நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். இவர் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில்  தேடப்பட்டு வந்த கொள்ளையர்களை கைது செய்ய ராஜஸ்தானுக்குச் சென்று அங்கே கொள்ளையர்களால் சுடப்பட்டு வீரமரணமடைந்தார். அவரின் உடல் அவருடைய சொந்த ஊரான சாலைபுதூரில் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் தென்காசியில் படப் பிடிப்பில் இருந்த நடிகர் கார்த்தி அங்கே இருந்து 1 மணி நேர தொலைவில் உள்ள சாலைப் புதூருக்குச் சென்று “ பெரியபாண்டியன் “ நினைவிடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து கார்த்தி கூறுகையில், காவலர் பெரியபாண்டியன்  இல்லத்துக்குச் சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் “ பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தானுக்குச் சென்ற அதே நாளில் தான் நீங்கள் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தைப் பார்த்தேன். தீரன் படத்தைப் பார்த்ததும் இவ்வளவு கொடூரமான கொலைகார கொள்ளை கும்பலா? இதைப் போன்ற ஒரு கும்பலைத்தான் என் கணவரும் பிடிக்கச் சென்றிருப்பாரோ என்று தோன்றியது. அதன் பின் அவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன். தீரன் படம் பார்த்தேன். அதில் வந்த பயங்கரமான காட்சிகளைப் பற்றிக் கூறி  அவரிடம் கவனமாக இருங்க, உங்களுடன் இன்னும் சில காவல் துறை போலீசையும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள்.எனக்கு மனசு சரியில்லை என்று கூறினேன். 

நான் அவருக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்று பயந்துகொண்டே இருக்கையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தது “ என்றார் . 

உண்மைச் சம்பவமான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்கும் போதே எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று மனஅழுத்தமாக இருந்தது. தற்போது அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தை தந்துள்ளது.

பெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த 15 சென்ட் இடத்தை அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டக் கொடுத்துள்ளார். அவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னைப் போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைப்பவர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல் எண்ணத்தில் தான் கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்குச் சென்று வீர மரணம் அடைந்துள்ளார். 

அங்கு மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். நமது அரசாங்கம் கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய Infrastructure வழங்க வேண்டும். ஈரம் காயாத அவருடைய சாமாதியில் நிற்கும்  போது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது. அவருடைய ஆன்மாவுக்கும் , குடும்பத்தாருக்கும் பிரார்த்தனை செய்கிறேன் என்றார் நடிகர் கார்த்தி.

click me!