குட்டு வைத்த நீதிமன்றம்; கர்நாடக திரைப்பட சபைக்கு அவசர அவசரமாக கமல் எழுதிய சமாதான கடிதம்

Published : Jun 03, 2025, 01:37 PM IST
Kamal Haasan

சுருக்கம்

கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு விளக்கம் அளித்து நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள உணர்வுப்பூர்வமான கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kamalhaasan letter to Karnataka Film Chamber : தமிழில் இருந்து தான் கன்னடம் உருவானது என கமல்ஹாசன் தக் லைஃப் ஆடியோ லாஞ்சில் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியிடப்படாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. கமலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறி இருந்தார். இதையடுத்து தக் லைஃப் படத்திற்கு கர்நாடகாவில் அனுமதி கோரி கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கமலை நீதிமன்றம் கடுமையாக சாடியது. இந்த நிலையில், கர்நாடக வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் சமாதான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

கமல் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது : “புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர் மீது, குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. நான் சொன்ன வார்த்தைகள் கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது அல்ல, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்த்துவதற்காக சொன்னவை. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த சர்ச்சையோ விவாதமோ இல்லை.

மொழி மீதான எனது அன்பு உண்மையானது - கமல்

தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. எனது வாழ்க்கை முழுவதும், கன்னட மொழி பேசும் சமூகத்தினர் எனக்கு அளித்த அரவணைப்பையும் பாசத்தையும் நான் போற்றி வந்துள்ளேன், மொழி மீதான எனது அன்பு உண்மையானது, மேலும் கன்னடர்கள் தங்கள் தாய்மொழியின் மீது வைத்திருக்கும் அன்பின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த மண்ணின் அனைத்து மொழிகளுடனும் எனக்குள்ள பிணைப்பு நிலையானது மட்டுமின்றி இதயப்பூர்வமானதும் கூட. அனைத்து இந்திய மொழிகளின் சமமான கண்ணியத்திற்காக நான் எப்போதும் வாதிட்டு வருகிறேன், மேலும் ஒரு மொழியின் மீது மற்றொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை நான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன், ஏனெனில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வு இந்திய ஒன்றியத்தின் மொழியியல் கட்டமைப்பை சீர்குலைக்கிறது.

சிவன்னா இவ்வளவு அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது வருத்தமளிக்கிறது - கமல்

எனக்கு சினிமாவின் மொழி தெரியும், அதைப் பேசவும் தெரியும். சினிமா என்பது அன்பையும் பிணைப்பையும் மட்டுமே அறிந்த ஒரு உலகளாவிய மொழி. என் கருத்தும் நம் அனைவருக்கும் இடையே அந்தப் பிணைப்பையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுவதற்காக மட்டுமே.

என் சீனியர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த இந்த அன்பும் பிணைப்பும்தான் நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இந்த அன்பும் பிணைப்பும்தான் சிவன்னா ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது. இதன் காரணமாக சிவன்னா இவ்வளவு அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் ஒருவருக்கொருவர் எங்கள் உண்மையான அன்பும் மரியாதையும் எப்போதும் நிலைத்திருக்கும். இப்போது அது மேலும் உறுதியாகி உள்ளது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

சினிமா என்பது மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும், அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுதான் எனது அறிக்கையின் நோக்கம், பொது அமைதியின்மை மற்றும் விரோதத்திற்கு நான் ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை, ஒருபோதும் அதற்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. எனது வார்த்தைகள் அவர்கள் விரும்பிய உணர்வில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது நீடித்த பாசம் அதன் உண்மையான வெளிச்சத்தில் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் மனதார நம்புகிறேன். இந்த தவறான புரிதல் தற்காலிகமானது என்றும், நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்த ஒரு வாய்ப்பு என்றும் நான் மனதார நம்புகிறேன்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!
மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ