வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியன் 2... தீயாய் வேலையில் இறங்கிய படக்குழு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 20, 2020, 8:04 PM IST
Highlights

தற்போது கிரேன் விபத்து நடைபெற்ற ஈவிபி அரங்கில் இருந்த அரங்குகள் அனைத்தும் பல்லாவரம் அருகில் உள்ள பின்னி மில்லுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

2017ம் ஆண்டே இந்தியன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியான போதும், ஷூட்டிங் கடந்த ஆண்டு தான் தொடங்கியது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் இந்தியன் 2  படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 

அதன் பிறகு கிரேன் விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்ததால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை, தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்து வந்த தடங்கலால் இந்தியன் 2 படப்பிடிப்பையே நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை மறுத்த லைகா நிறுவனம் கண்டிப்பாக படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவோம் என்று கூறி கமல் ரசிகர்களை குஷியாக்கியது. மேலும் இரண்டு பட அளவிற்கு இருக்கும் காட்சிகளை படக்குழு சுருக்கி வருகிறது. 

தற்போது கிரேன் விபத்து நடைபெற்ற ஈவிபி அரங்கில் இருந்த அரங்குகள் அனைத்தும் பல்லாவரம் அருகில் உள்ள பின்னி மில்லுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளித்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் அங்கு தான் நடைபெற உள்ளன. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளும் தீயாய் நடப்பதால் வதந்திகள் அனைத்திற்கும் படக்குழு தங்களது செயலால் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. 

click me!