
தில்லான ஆங்கில ஸ்லோகன் ஒன்று உண்டு, ‘I can be beaten by myself only' என்று. இது ரஜினிக்குதான் நச்சென்று பொருந்தும்.
தமிழகத்தில் ஆயிரம் பிரச்னைகளை தாண்டி கடந்த ஒரு வாரமாக டிரெண்டிங்காக இருந்த விஷயம் ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா! வரலாமா?’ என்பதுதான். கட்சிகள், ஊடகங்கள், டீக்கடை அரட்டைகள் என எங்கெங்கும் இதுதான் விவாத கரு. ஆனால் ரஜினி பற்றிய இந்த பரபரப்பு ரஜினியாலேயே பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ரஜினியின் புதிய படத்தின் பெயர் ‘காலா கரிகாலன்’ என்று இன்று காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்து அதுதான் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. ஆக ரஜினியை ரஜினியால்தான் வீழ்த்த முடிகிறது.
சரி, ‘காலா’ வை கொஞ்சம் கவனிப்போம்...
மாஸ் ஹீரோ அந்தஸ்தை பெற்ற பிறகு ரஜினியின் இயக்குநர்கள் பெரும்பாலும் தொடர் ஹிட் அடித்த அனுபவசாலி இயக்குநர்களாகவேதான் இருப்பார்கள். பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், ஆர்.சுந்தர்ராஜன், சுரேஷ்கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் என்று லிஸ்ட் அவுட் செய்யலாம். ஆனால் இதை பிரேக் செய்தவர் ரஞ்சித்தான்.
அட்டக்கத்தி, மெட்ராஸ் எனும் இரண்டே படங்களுக்கு பிறகு நேரடியாக ரஞ்சித் கையெழுத்திட்டது ‘கபாலி’ எனும் மெகா ப்ராஜெக்டில். இத்தனைக்கும் இவரது முந்தைய இரண்டு படங்களுக்கும் பெரிய கேன்வாஸ் இருக்கவில்லை. அட்டக்கத்தியில் புது முகங்கள், மெட்ராஸில் கார்த்தி மட்டுமே வெகுஜன நட்சத்திரம். ஆனாலும் ரஜினிக்கு ரஞ்சித்தை பிடித்ததென்றால் இரு படங்களிலும் அவர் பதித்த முத்திரை. கூடவே கபாலியின் கதையை அவர் சொன்ன விதமும், தயாரிப்பாளர் தாணு காட்டிய நம்பிக்கையும்.
பொதுவாக குறிப்பிட்ட அடையாளம், பின்னணி உடைய இயக்குநர்களின் வட்டத்துக்குள் ரஜினி சிக்கமாட்டார். ஆனால் ‘ஒடுக்கப்பட்ட’ மக்களின் சூழலை முன்னிலைப்படுத்தும் ரஞ்சித்தின் படத்தில் அவர் கமிட் ஆனது இண்டஸ்ட்ரியை ஆச்சரியப்படுத்தியது. அதிலும் என்னதான் கபாலி கேங்க்ஸ்டர் கதையாக பார்க்கப்பட்டாலும் அதன் பின்னணி ஒடுக்கப்பட்டோர் என்பதுதான்.
கபாலி மிக பிரமாண்டமாய் ப்ரமோ செய்யப்பட்டாலும் கூட அந்தளவுக்கு அது ஓடவில்லை என்பதே யதார்த்தம். விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் வெளிப்படையாகவே நட்டக்கணக்கு காண்பிக்கிறார்கள். இதற்கு ‘ஷூட்டிங் சமயத்தில் தயாரிப்பு தரப்பிலிருந்து சில கெடுபிடிகள் இருந்தன. ஃபைலில் இருந்த கதையை, காட்சிகளை படமாக்க முடியாமல் போனதே படத்தின் டெம்போ தொய்வுக்கு காரணம்.’ என்று இயக்குநருக்கு நெருங்கிய தரப்பு சொன்னது.
இந்நிலையில்தான் ரஜினி_ரஞ்சித்_ சந்தோஷ்நாராயணன் கூட்டணி மீண்டும் சாத்தியமாகியிருக்கிறது. இதை இணைத்திருக்கும் தயாரிப்பாளராக தனுஷ். அவரது வுண்டர்பார் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
தன்னை கண்டெடுத்த குருநாதரின் தயாரிப்பில், தன்னை வாழவைத்த இயக்குநர்கள்_தயாரிப்பாளர்களின் கூட்டு தயாரிப்பில் என்றெல்லாம் நடித்த ரஜினி இப்போது தனது மருமகனின் தயாரிப்பிலும் நடிப்பது இந்திய சினிமாவையே அவரை நோக்கி ஆச்சரியத்துடன் திருப்பி இருக்கிறது. எத்தனை ஆண்டுகளாக நின்று விளையாடுகிறார் மனிதர் என்கிற ஆச்சரியம்தான் அது.
’கரிகாலன் எனும் பெயரின் சுருக்கமே காலா. கரிகாலன் எனும் பெயர் ரஜினி சாருக்கு பிடித்த பெயர். அதனால் சொன்னதுமே அவர் டபுள் ஓ.கே. சொல்லிவிட்டார்.’ என்று டைட்டில் பற்றி ஹிண்ட் கொடுக்கிறார் ரஞ்சித்.
பொதுவாக ஒரு படம் முடிந்ததும் அதன் ரிலீஸுக்கு முன்னதாகவே இமயமலை போய்விடுவார் ரஜினி. அடுத்து அவர் எப்போது திரும்புகிறார் என்றே தெரியாது. ஆனால் சைலண்டாக திரும்பி வந்து அடுத்த படத்தின் கதையில் கமிட் ஆகி, அதற்கேப கெட்டப்பை மாற்றி போட்டோ ஷூட்டும் முடித்துவிடுவார்கள். அந்த படத்தின் விளம்பரம் வெளியாகையில் ரஜினியின் நியூ லுக்கை பார்த்து தமிழகம் அதிரும். ஆனால் காலாவில் அந்த ஃப்ரெஸ்னஸ் அடிபட்டு போயிருப்பது உண்மையே.
காரணங்கள்?
தாடி சகிதமாக கடந்த வாரம்தான் தன் ரசிகர்களுடனான போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார் ரஜினி. இப்போது காலாவின் பர்ஸ்ட் லுக் ஸ்டில்லில், முன் தலையை மறைக்கும் விக்குடன் அதே தாடியுடன் அவர் இருப்பதால், தோற்றத்தில் புதிய ஸ்டைல் தெரியவில்லை என புலம்புகிறார்கள் ரசிகர்கள். இன்னொன்று கபாலியின் சாயல் காலாவில் அதிகம் படர்ந்து தெரிகிறது. கபாலி ஃபர்ஸ்ட் லுக்கில் இருந்தது போலவே ரஜினியின் தோற்றம் இதில் இருப்பதாக ரசிகர்கள் சொல்கிறார்கள்.
மும்பையில் தமிழர்கள் வாழும் சேரி பகுதியான தாராவிதான் கதைகளம் என்று சொல்லப்படுகிறது. வரும் 28_ம் தேதியிலிருந்து மும்பையில் ஷூட் துவங்குகிறதென்று ரஞ்சித் சொல்லியிருப்பதால் இது ஊர்ஜிதமாகிறது. கூடவே இன்று வெளியாகியிருக்கும் டைட்டில் ஸ்டில்லில் கலீஜான வீதிகள், ரயில்வே டிராக், அதில் விளையாடும் சிறுவர்கள், ஹிந்தி எழுத்துக்களை கொண்ட போர்டுகளை கொண்ட கடைகள் என்கிற பின்னணியில் மும்பை பதிவெண் கொண்ட ஜீப்பின் பானட்டில் வெளிர் காவி நிற வேஷ்டியும், கறுப்பு நிற சட்டையுமாக கெத்தாக ரஜினி உட்கார்ந்திருக்கிறார். அவரது பின்னால் ஒரு நாட்டு ரக வீதி நாய் நிற்கிறது ஆக காலாவின் பின்னணி சேரிதான் என்பது புரிந்துவிட்டது.
ரஞ்சித் இயக்கும் படங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் அவலங்களை பற்றிய பேசும்படி சில காட்சிகளை வைப்பார். அந்தவகையில், போஸ்டரில் ரஜினி ஜீப்பில் உட்கார்ந்திருக்கும் ஸ்டில் உள்ளது. அதன் எண் MH 01 BR 1956. ‘இதில் MH 01 என்பது அம்பேத்கர் பிறந்த மாநிலமான மகாராஷ்டிராவைக் குறிக்கிறது. BR என்பது பீமாராவ் அம்பேத்கரைப் பிரதிபலிப்பதாக உள்ளது. 1956 என்பது அம்பேத்கர் மறைந்த வருடம்.
மேலும் காலா என்றால் இந்தியில் கருப்பு என்று அர்த்தம். வடநாட்டவர் நம்மை அழைக்கும் சொல் அது’ எனச் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விளக்கத் தொடங்கிவிட்டனர். இதை ஒருவகையில் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் டைட்டில் போஸ்டரைத் தலைகீழாகப் பார்த்தால் தமிழீழம் போல் தெரிவதாக டிவிட்டரில் ஒருசிலர் வதந்தியைக் கிளப்பியுள்ளனர். மேலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தனக்குத்தானே சூட்டிக் கொண்ட பெயர்களில் ஒன்று கரிகாலன் எனவே ரஞ்சித் இதில் தமிழீழ அரசியலைப் பேசுவார் என்பதும் புரிந்துவிட்டது.
இன்னொரு டைட்டில் ஸ்டில்லில் முகம், உடம்பெல்லாம் ரத்தம் தோய்ந்திருக்க வெளிர் தாடியும், டை தலையிலும் ஐம்பது வயதுகளை தாண்டிய ஆனால் முறுக்கேறிய மனிதனாக உக்கிரப்பார்வையுடன் க்ளோசப்பில் முறைக்கிறார் ரஜினி.
ஆக இந்த படமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளுக்காக போராடும் ஒரு தாதா அல்லது தலைவனின் கதையை சொல்லும் காம்ரேடு சித்தாந்த படமாக இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
படத்தின் மெயின் டைட்டிலான ‘காலா’ என்பது எமனை குறிக்கிறது. எமனை தெய்வமாக வழிபடும் தமிழின மக்களும் இருக்கிறார்கள். நெல்லை மாவட்ட மக்களில் சிலர் இப்படி வணங்குவார்களென்கிறார்கள்.
ஆக மும்பையில் செட்டிலான நெல்லை மக்களின் கதையை, துன்பத்தை, கொண்டாட்டத்தை, காதலை, வீரத்தை, துரோகத்தை, அடக்குமுறைக்கு எதிரான எழுச்சியை சொல்லும் படமாக இது அமையலாம் என்று முதற்கட்ட தகவல்.
கடந்த நான்கு வாரங்களாக தேசத்தையே தனது ட்ரெண்டிங்கில் வைத்திருந்த பாகுபலி 2_ஐ காலா அசைக்குமா!
ஆக மொத்தத்தில் தனது ஃபர்ஸ்ட் கியரை கெத்தாக போட்டிருக்கிறது காலா, இனி டாப் கியர் வரை அதிர அதிர நகரும் என்பதில் டவுட்டே இல்லைதானே! ஏன்னா இது ரஜினி ராஜ்ஜியம்டா கண்ணா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.