Jai Bhim : ஜெய்பீம் என்று சொல்வதே தப்பு...! சூர்யாவை வெளுத்து வாங்கும் ஜான்பாண்டியன்

By Ganesh PerumalFirst Published Nov 30, 2021, 8:21 PM IST
Highlights

ஜெய் பீம் படத்தை ஜாதி ரீதியாக எடுத்ததே தவறு என தெரிவித்துள்ள ஜான் பாண்டியன், இருளர் சமுதாயம் மட்டுமல்லாமல், அனைத்து சமுதாயத்திலும் இத்தகைய கொடுமைகள் நடப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். 

சூர்யா நடிப்பில் தீபாவளியையொட்டி ஓடிடியில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அதே அளவு சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. இப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பாமக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் அந்த சர்ச்சைக்குரிய காட்சி மாற்றப்பட்ட நிலையிலும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. 

பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், ஜெய் பீம் படக்குழு மீது கடும் அதிருப்தி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். 

இதேபோல் வன்னியர் சங்கமும் ஜெய் பீம் படக்குழு ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என வலியுறுத்தி கோர்ட் நோட்டீஸ் அனுப்பியதோடு, 'ஜெய்பீம்' திரைப்படத்தை எந்த ஒரு மத்திய, மாநில அரசுகளின் விருதுகளுக்கும் பரிந்துரைக்க கூடாது என கூறி இருந்தது. இவ்வாறு இந்த விவகாரத்தை பாமக-வினர் தொடர்ந்து பூதாகரமாக்கினர்.

இந்நிலையில், ஜெய் பீம் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக இடம்பெற்றுள்ள காட்சி வியாபர நோக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஜெய் பீம் என்றால் அம்பேத்கரை குறிக்கும் ஒரு சொல். ஆனால் படத்தில் அவரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே. 

அதனால் இப்படத்தை ஜெய் பீம் என்று சொல்வதே தவறு என அவர் சாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஜெய் பீம் படத்தை ஜாதி ரீதியாக எடுத்ததே தவறு என தெரிவித்துள்ள ஜான் பாண்டியன், இருளர் சமுதாயம் மட்டுமல்லாமல், அனைத்து சமுதாயத்திலும் இத்தகைய கொடுமைகள் நடப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். 

click me!