Jai Bhim Movie : ஆஸ்கர் யூடியூப் தளத்தில் ஒலித்த தமிழ்... சூர்யாவின் ஜெய்பீம் படைத்த மாபெரும் வரலாறு..

By Ganesh PerumalFirst Published Jan 18, 2022, 11:37 AM IST
Highlights

ஆஸ்கர் விருதுகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த யூடியூப் பக்கத்தில் ஒரு தமிழ் படத்தின் காட்சி இடம்பெறுவது இதுவே முதன்முறை.

உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்,  சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. ஓடிடி தளத்தில் கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது அனைவரும் அறிந்ததே. 

இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. இதில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு (பார்வதி அம்மாள்)  நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

இப்படம் எந்த அளவுக்கு பாராட்டுக்களை பெற்றதோ அதே அளவு சர்ச்சைகளிலும் சிக்கியது. குறிப்பிட்ட சமூகத்தினரை மிகவும் கொடுமைக்காரர்களாக சித்தரித்துள்ளதாக அடுத்தடுத்து பல பிரச்சனைகளை ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் எதிர்கொண்டார் நடிகர் சூர்யா. இவ்வாறு பல்வேறு தடைகளை கடந்து சாதித்த ஜெய் பீம் படத்திற்கு தற்போது மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதன்படி ஆஸ்கர் விருதுகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த யூடியூப் பக்கத்தில் ஒரு தமிழ் படத்தின் காட்சி இடம்பெறுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. 

#SceneAtTheAcademy என்ற பெயரில் உலக சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை உலக சினிமா ரசிகர்களுக்கு ஆஸ்கர் வழங்குகிறது. இதில் ஜெய் பீம் படத்தின் 12 நிமிட காட்சியை வெளியிட்டு, படத்தை பற்றியும் நீதியரசர் சந்துருவின் முயற்சிகள் பற்றியும் பாராட்டி எழுதியும் வெளியிட்டுள்ளது ஆஸ்கர் விருதுகள் குழு. 

 

click me!