Jai bhim: ஹாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளிய ஜெய் பீம்... ரேட்டிங்கில் முன்னணி இடத்தைப் பிடித்து அசத்தல்..!

By Asianet TamilFirst Published Nov 10, 2021, 10:47 PM IST
Highlights

இந்தியப் படம்  ஒன்று, இவ்வளவு ரேட்டிங்கை பெற்று முன்னணி இடத்தை பிடிப்பது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது.   

ஹாலிவுட் படங்களை முந்திக்கொண்டு ‘ஜெய் பீம்’ ஐஎம்டிபி ரேட்டிங்கில் அதிரடியாக முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடி தளத்தில் வெளியான 'ஜெய் பீம்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா தயாரித்து நடித்த இந்தப் படம், 5 மொழிகளில் வெளியானது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டில் பொய்யாக திருட்டு வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட ராஜக்கண்ணு என்ற ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவரின் உண்மைக் கதையை மையாக வைத்து ‘ஜெய் பீம்’ உருவாக்கப்பட்டது. படம் வெளியானது முதலே வரவேற்பைப் பெற்ற நிலையில், சில காட்சிகள் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

உண்மையான கதாபாத்திரத்தை மாற்றியது, குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிக்கும் வகையில் இடம் பெற்ற காலாண்டர் போன்றவை கடும் எதிர்ப்பையும் சந்தித்தது. இந்நிலையில் ‘ஜெய் பீம்’ படம் ஹாலிவுட் படத்தை முந்திவிட்டு ரேட்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது. வெளியாகும் திரைப்படங்கள் ஐஎம்டிபி (IMDb) ரேட்டிங்கிற்கு உட்படுத்தப்படுவது வழக்கம். இதில் உலகமெங்கும் தயாரிக்கப்படும் படங்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த ரேட்டிங்கில் ஆல் டைம் முதல் படமாக 1994-ஆம் ஆண்டில் வெளியான ஹாலிவுட் படமான ‘தி ஷாசாங் ரெட்டிம்சன்’ உள்ளது. அடுத்த இடத்தில் 1972-ஆம் ஆண்டில் வெளியான ‘தி காட்பாதர்’ மூன்றாவது இடத்தில் 2008-ஆம் ஆண்டில் வெளியான ‘தி டார்க் நைட்’ ஆகிய படங்கள் இருந்தன. இந்தப் படங்கள் 10க்கு 9 முதல் 9.3 வரை ரேட்டிங் பெற்றிருந்தன. ஆனால், தற்போது இந்த ஹாலிவுட் படங்களின் ரேட்டிங்கை முந்திக்கொண்டு ‘ஜெய் பீம்’ அதிக ரேட்டிங்கைப் பெற்று முன்னணி இடத்துக்கு வந்துள்ளது. ஜெய் பீம் 10க்கு 9.6 என்ற ரேட்டிங்கை பெற்றதால், ஐஎம்டிபி ரேட்டிங்கில் அதிரடியாக முன்னேறியுள்ளது. இந்தியப் படம்  ஒன்று, இவ்வளவு ரேட்டிங்கை பெற்று முன்னணி இடத்தை பிடிப்பது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது.   

click me!