Jai Bhim மோதல் - சூர்யா திரைப்படம் ஓடிய திரையரங்கில் பா.ம.க.-வினர் ரகளை…. போஸ்டரை கிழித்தெறிந்து ஆவேசம்..!

By manimegalai aFirst Published Nov 14, 2021, 5:30 PM IST
Highlights

பா.ம.க.வினர் போராட்டத்தை அடுத்து திரையரங்கிற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. ஆனாலும், சூர்யாவின் படத்தை திரையிட திரையரங்க நிர்வாகம் மறுத்துவிட்டது.

பா.ம.க.வினர் போராட்டத்தை அடுத்து திரையரங்கிற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. ஆனாலும், சூர்யாவின் படத்தை திரையிட திரையரங்க நிர்வாகம் மறுத்துவிட்டது.

Jai Bhim திரைப்படத்தால் நடிகர் சூர்யா மற்றும் பா.ம.க-வினர் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் படத்தில் வன்னியர்கள் மீது திட்டமிட்டு வன்மத்தை கக்கியுள்ளதாக அந்த சமூகத்தினர் கொதிப்படைந்துள்ளனர். வில்லன் கதாபாத்திரத்திற்கு குருமூர்த்தி என பெயர் வைத்து மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டியை குருவை அவமானப்படுத்தினார்கள் என்றும், வில்லன் வீட்டில் வன்னியர்களின் புனித சின்னமான அக்னி கலசத்தை காட்சிப்படுத்தியதற்கும் வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உன்மைச் சம்பவத்தை படமாக எடுத்தவர்கள் நீதிபதி, காவல்துறை அதிகாரி, பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவருக்கும் உன்மையான பெயரையே வைத்தவர்கள் வில்லனாக வரும் காவல் ஆய்வாளருக்கு மட்டும் பெயரை மாற்றியது ஏன்.? இது வன்னியர்களுக்கு எதிராக திட்டமிட்டு வைக்கப்பட்ட காட்சிகளே என்று வேறு சில சமூகத்தவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜெய் பீம் சர்ச்சைகள் தொடர்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு ஒன்பது கேள்விகளை எழுப்பியிருந்தார். கருத்து சுதந்திரம் என்பது எந்த ஒரு சமூகத்தையும் திட்டமிட்டு இழிவுபடுத்துவது ஆகாது என்றும் அன்புமனி கூறி இருந்தார். அன்புமனி கடிதத்திற்கு பதிலளித்த சூர்யா, நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட படத்தை பெயர் அரசியலுக்குள் சுருக்காதீர்கள், புரிதலுக்கு நன்றி என்று சிம்பிளாக முடித்துவிட்டார்.

நடிகர் சூர்யாவின் விளக்கம் பா.ம.க.-வினர் மற்றும் வன்னியர் சமூக இளைஞர்களை மேலும் கொதிப்படையவே செய்துள்ளது. அதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரின் ஜெய் பீம் குறித்த கருத்துகளும் பா.ம.க.-வினரை வெறுப்பேற்றி உள்ளது. நடிகர் சூர்யாவின் படம் திரையிடப்படும் திரையரங்குகளை கொளுத்துவோம் என்று காடுவெட்டி குருவின் மருமகன் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதேபோல் நடிகர் சூர்யாவுக்கு, காடுவெட்டி குருவின் மகனும் கண்டனம் தெரிவித்தார்.

ஜெய் பீம் படத்திற்காக நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் படத்தை எந்த தியேட்டரிலும் ஓடவிட மாட்டோம் என வன்னியர்கள் கூறியுள்ளனர். இந்தநிலையில், மயிலாடுதுறையில் உள்ள பியர்ல்ஸ் திரையரங்கில் நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்டது. இதையறிந்த பா.ம.க.-வினர் அங்கு போராட்டம் நடத்த விரைந்தனர். பா.ம.க.-வினர் வருவதை அறிந்த திரையரங்க நிர்வாகம் உடனடியாக போஸ்டரை மாற்றினர். ஆனால் அரங்கின் உள்ளே நுழைந்த பா.ம.க.-வினர் வேல் திரைப்படத்தை நிறுத்தும்படி முழக்கமிட்டனர். நுழைவு வாயிலில் இருந்த வேல் பட போஸ்டர்களை கிழித்து வீசியவர்கள் நடிகர் சூர்யாவை கண்டித்து முழக்கமிட்டனர்.

பா.ம.க.-வினர் ரகளையை அடுத்து வேல் திரைப்படம் காலைக் காட்சியோடு நிறுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சூர்யாவின் எந்த திரைப்படத்தையும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் பா.ம.க.-வினர் முழக்கமிட்டனர். தகவல் அறிந்து திரையரங்கிற்கு வந்த காவல் துறையினர், சூர்யாவின் படத்தை திரையிடும்படியும், தாங்கள் பாதுகாப்பு அளிப்பதாகவும் கூறினர். ஆனால் பா.ம.க.-வினருக்கு அஞ்சிய திரையரங்க நிர்வாகம் வேல் படத்தை திரையிட மறுத்துவிட்டனர். இதையடுத்து சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தர பாண்டியன் படம் திரையிடப்பட்டது. சூர்யா படம் ஓடிய திரையரங்கில் பா.ம.க.-வினர் ரகளையில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!