தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை உண்மையா?... சத்யராஜ் மகள் திவ்யாவின் திடீர் அறிக்கையால் பரபரப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 23, 2021, 4:57 PM IST
Highlights

தமிழகத்தில் தடுப்பூசி, வெண்டிலேட்டர், ஆக்ஸிஜன், படுக்கை வசதி என எதிலுமே தட்டுப்பாடு இல்லை என அரசு உறுதியாக தெரிவித்து வரும் நிலையில், சத்யராஜ் மகளின் இந்த அறிக்கை பரபரப்பை அதிகரித்துள்ளது. 

​தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.​ தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், புனேவில் இருந்து இரண்டு லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரபல நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ், கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க "மகிழ்மதி" என்ற இயக்கத்தையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார். தமிழக அரசுக்கு திவ்யா வைத்துள்ள கோரிக்கையில், நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் பாதிப்பு தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 

போதுமான அளவு தடுப்பூசிகள் உள்ளன என்று தமிழக அரசு கூறினாலும் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதற்காக சென்ற மக்கள் திருப்பி அனுப்பப்படுவது மருந்தின் பற்றாக்குறையை உறுதிசெய்கிறது.அரசு மருத்துவமனைகளில் நிகழும் இந்த பற்றாக்குறையால் தனியார் மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அங்கேயும் தடுப்பூசியின் விலை எளிய மக்களால் வாங்க முடியாத உச்சத்தில் விற்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அதைப் பெறுவது அவர்களின் உரிமை. எனவே அரசாங்கம் தடுப்பூசியின் பற்றாக்குறையை போக்கவும், தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி, வெண்டிலேட்டர், ஆக்ஸிஜன், படுக்கை வசதி என எதிலுமே தட்டுப்பாடு இல்லை என அரசு உறுதியாக தெரிவித்து வரும் நிலையில், சத்யராஜ் மகளின் இந்த அறிக்கை பரபரப்பை அதிகரித்துள்ளது. 
 

click me!