
தமிழ் சினிமாவில் அதிக படங்களைத் தயாரித்துவரும் லைகா நிறுவனம், நிதி நிலவரத்தைப் பொறுத்தவரை மிகவும் நெருக்கடியில் இருப்பதாகவும் அடுத்து இந்நிறுவனம் தயாரித்துவரும் பெரும்படங்களில் ஏதாவது ஒன்று சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்காவிட்டால் அவர்கள் தமிழ் சினிமாவை விட்டு துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓட்டமெடுக்க வாய்ப்புண்டு என்று நம்பகத்தகுந்த விநியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லைகா நிறுவனத்தின் சார்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் காப்பான். செப்டம்பர் மாதம் இந்தப் படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.காப்பான் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அனைவரும், லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் தமிழ் சினிமாவை நேசித்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அவ்வாறு பேசப்பட்டது அத்தனையும் முகஸ்துதி என்று சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும். ஏனெனில் இந்நிறுவனம் தயாரித்த எந்தப் படமும் இதுவரை சொல்லிக்கொள்ளும்படி லாபம் ஈட்டியதில்லை. இன்னொரு பக்கம் ‘இந்தியன் 2’,’சபாஷ் நாயுடு’படங்களால் முடங்கிய பெரும் தொகை.
இந்நிறுவனத்தின் கடைசி ரிலீஸாக ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் நீண்டகால தயாரிப்பில் இருந்த 2.0 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் பட்ஜெட்டை அடிப்படையாகக்கொண்டு வியாபாரத்தில் இறங்கியது லைகா நிறுவனம்.தமிழகத்தில் உள்ள ஒன்பது விநியோகப் பகுதிகளுக்கும் லைகா நிறுவனம் கூறிய விலையைக் கேட்டு படம் வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டினார்கள். இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் அனைத்து ஏரியாக்களுக்கும் விநியோக முறையில் மிகப் பெரும் தொகையை பெற்றுக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்தது லைகா.தமிழகத்தில் 2.0 படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையில் 2.0 படம் திரையிட்டு, கிடைத்த வருவாய் நீங்கலாக, விநியோகஸ்தர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாயை திரும்பக் கொடுக்க வேண்டும் லைகா.2.0 படத்துக்கு இணைய தளங்களில் வெளியிட்ட விளம்பரக் கட்டணத்தை அவர்களுக்குக் கொடுக்க முடியாத அளவுக்கு லைகா நிறுவனம் நிதி நெருக்கடியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்து ரிலீஸாக உள்ள ’காப்பான்’ படத்தின் ஏரியா உரிமைகளை அவுட்ரேட் அல்லது விநியோக முறையில் வாங்க வேண்டாம் என தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தனது உறுப்பினர்களுக்குக் கூறியுள்ளது.2.0 படம் வெளியீட்டின்போது விநியோகஸ்தர்களிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை முழுமையாகத் திருப்பிக் கொடுக்காத வரை, காப்பான் படத்துக்கு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு விதித்துள்ள தடை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே மிகப்பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளாகியுள்ள லைகாவுக்கு ரஜினியின் ‘தர்பார்’படம் கைகொடுத்தால்தான் உண்டு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.