வெறும் 60 ரூபாய்க்கு வாங்கிய ஆர்மோனியப்பெட்டியும் ஆறாயிரம் பாடல்களும்...

By manimegalai aFirst Published Oct 25, 2018, 12:28 PM IST
Highlights

‘என்னிடம் இருக்கும் விலை உயர்ந்த பொக்கிஷமான இந்த ஆர்மோனியப்பெட்டி வெரும் 60 ரூபாய்க்கு உங்கள் ஊரில் வாங்கியது’ என்று உணர்ச்சிகரமான கைதட்டல்களுக்கு நடுவே தெரிவித்தார் இசைஞானி இளையராஜா.

‘என்னிடம் இருக்கும் விலை உயர்ந்த பொக்கிஷமான இந்த ஆர்மோனியப்பெட்டி வெரும் 60 ரூபாய்க்கு உங்கள் ஊரில் வாங்கியது’ என்று உணர்ச்சிகரமான கைதட்டல்களுக்கு நடுவே தெரிவித்தார் இசைஞானி இளையராஜா.

'இசைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் 'இசைஞானியுடன்  ஒருநாள்' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாடிய இளையராஜா ஏராளமான பாடல்களை பாடி மாணவர்களை பரவசப்படுத்தினார்.

முதலில் கேக் வெட்டி 75-வது பிறந்த நாள் மகிழ்வை மாணவ, மாணவிகளோடு பகிர்ந்துகொண்டார். அடுத்ததாக கல்லூரி மாணவ, மாணவிகள் இளையராஜாவின் பாடல்களைப் பாடி அசத்த, அதை அகம் மகிழ்ந்து ரசித்தார் இளையராஜா. அடுத்ததாக மைக் பிடித்த இளையராஜா கல்லூரிக்கு அடையாள அட்டை இல்லாமல் வந்திருக்கிறேன் என்று சொல்ல அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது. `` நான் எத்தனையோ கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், இந்தக் கல்லூரியில் என் எதிரே உள்ள மேஜையில் ஆர்மோனியப் பெட்டியைக் கொண்டு வந்து வைத்ததும்… எழுந்த கரகோஷம் இருக்கே….!?(இளையராஜா முகத்தில் பூரிப்பு)

என்னுடன் நண்பர்களாக பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. இவன் ஒருவன்தான் என்னுடைய நண்பன் என ஆர்மோனியப்பெட்டியைக் கைகாட்டிச் சொன்னவர்; இவன் என்னை முழுமையாக அறிவான். ஆனால், அவனை நான் இன்னும் முழுமையாக அறியவில்லை. இவன் எங்கே பிறந்தான் தெரியுமோ?! (மாணவர்கள் கோயம்புத்தூர் என்று கோஷம் எழுப்புகிறார்கள்) கோவை உக்கடத்தில் எம்.என்.பொன்னையா ஆசாரியார் என்பவரிடமிருந்து இதை என் அண்ணா வாங்கி வந்தார். விலை 60 ரூபாய். உலகிலேயே விலை மதிப்பற்ற பொருள் எதுவென என்னைக் கேட்டால் நான் இந்த ஆர்மோனியத்தைதான் சொல்வேன். இதற்குள் பொக்கிஷம் கொட்டிக்கிடக்கிறது. புதிது புதிதாக வந்துகொண்டே இருக்கிறது. சிறு வயதில் நான் அதைத் தொட்டால் அண்ணா பிரம்பால் அடிப்பார். அவர் இருக்கும் நேரத்தில்  எடுக்கவே மாட்டேன். அவர் இல்லாதபோது எடுத்து வாசித்துப் பழகினேன். தப்பும் தவறுமாக வாசித்துதான் கற்றுக்கொண்டேன். தவறுகள் போல நமக்கு குரு வேறு யாரும் கிடையாது.

நமது தவறே நமக்கு குரு. நாம் செய்யும் தவறுகளே இதை செய்யாதே என்று சொல்லும். மறுபடி செய்யவும்  சொல்லும். நம் தவறுகளுக்காக நாமே நம்மை பாராட்டிக் கொள்ளக்கூடாது'' என்ற இளையராஜா ஆர்மோனியத்தை திறந்து `ஜனனி…ஜகம் நீ… அகம் நீ' என்று பாட… கரகோஷம் அடங்க வெகுநேரம் பிடித்தது.

மேலும், ''இவ்வளவு டெக்னாலஜி இருந்தும் அது வெறும் மாயத்தோற்றம். எனக்கு எல்லாப் பாடல்களுமே ஆன்மிக பாடல்கள்தான்.  'சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்று மாணவர்கள் பாடினார்களே' அதுவும் எனக்கு ஆன்மிகப் பாடல்தான். ஆன்மிகத்திலும் காதல் இருக்கிறது. ஒரு பாடல் என்பது நல்ல கருத்தையும், உணர்வையும் கொடுக்க வேண்டும் எனவும் அது இல்லை என்றால் பாடலே இல்லை.

பாட வரும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான ஆலோசனைகள் சொல்ல முடியாது. அது பாடுபவர்களைப் பொறுத்து மாறும்'' என்றவர் மேடையில் இருந்த ஒரு மாணவியை பாடச்சொல்லி, கரெக்‌ஷன் சொன்னது அத்தனை அழகு. தொடர்ந்து ஒரு மாணவர் எழுந்து ஒரு சுச்சிவேஷனைச் சொல்லி, நீங்கள் இதற்கு மெட்டுப் போட வேண்டுமென்று கேட்டார். கண்களை இறுக்க மூடிய இளையராஜா.. ஆர்மோனியத்தில் விரல்களை விளையாட விட்டார். சட்டென ஒரு ட்யூன் மாட்ட… அதற்கு முதல் வரியும் கொடுத்து ஹம்.. செய்தபோது. ஆர்ப்பரித்தது கூட்டம்.

இறுதியாக மாணவி எழுந்து ``இதுவரை நீங்கள் இசை அமைத்த பாடல்களில் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாத பாடல் எது?'' என்று கேட்க,  ``இதுவரை நான் இசையமைத்ததில் எந்தப் பாடாலுமே நான் எதிர்பார்த்தபடி அமைந்ததில்லை. ஒவ்வொரு பாடலிலும் எங்கேயாவது தவறு இருக்கும். இசையில் அனைத்துச் செல்வங்களும் இருக்கின்றன. அதைச் சரியாக பயன்படுத்த வேண்டும். இசைக்கு வெற்றி, தோல்வி எதுவுமே கிடையாது. வெற்றி தோல்வி என்பதை மாணவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. மற்றவர்களுக்குதான் நான் இசைஞானி. எனக்கு நான் இன்னமும் இசைஞானி இல்லை. சொல்லப்போனால் எனக்கு நான் இளையராஜவே இல்லை'' என்றவர். இறுதியாக, `தென்றல் வந்து தீண்டும் போது' என்ற பாடலைப் பாட எல்லோர் இதயமும் காற்றில் கலந்தது.

click me!