சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று நடந்த ஒரு விழாவில் பங்கேற்று, அக்கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள்.
இன்று சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் அங்கே குழுமியிருந்த மாணவர்களின் கேள்விகளுக்கு தொடர்ச்சியாக பதில் அளித்த அவர் பல்வேறு விஷயங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக அரசியல், சினிமா என்று தனது நேரத்தை தன்னால் எவ்வாறு பகிர்ந்து செயல்பட முடிகிறது என்பது குறித்து மாணவர் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்பொழுது ஒரு மாணவர் இளைஞர்களின் தற்கொலை குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்ட பொழுது, "நானும் எனது 20, 21 வயதில் தற்கொலை குறித்து யோசித்து இருக்கிறேன்".
"கலைத்துறையில் எனக்கான வாய்ப்பு சரியாக கிடைக்கவில்லை என்று ஏங்கி இருக்கிறேன், ஆனால் எப்போதும் தற்கொலை ஒரு முடிவாகாது என்பதை நான் உறுதியாக நம்பினேன்" என்றார். "இருள் என்பது உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் இருக்காது, நிச்சயம் உங்களுக்கான விடியல் வரும், அந்த விடியல் வரும் அந்த கொஞ்ச நேரம் கஷ்டப்பட்டு உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம்" என்றார்.
"ஐயா அப்துல் கலாம் அவர்கள் சொன்னது போல இருளாக இருக்கும் நேரங்களில் உங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் கனவுகளை காணுங்கள். அந்த கனவுகள் நீங்கள் தூங்கும் பொழுது வரும் கனவுகள் அல்ல, உங்களை தூங்கவிடாமல் வரும் கனவு" என்று அவர் கூறினார்.
"மரணம் என்பது வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் தான், அது வரும் பொழுது வரட்டும், நீங்களே அதை தேடாதீர்கள். ஒவ்வொரு நாளும் உறங்க போகும் போதும் உங்கள் லட்சியத்தை பற்றி கனவு காணுங்கள், அந்த லட்சியம் நிறைவேறாவிட்டாலும் பரவாயில்லை, அதற்கான பிளான் பி என்னவென்று எப்பொழுதும் யோசித்துக் கொண்டே இருங்கள்" என்று அவர் கூறினார்.
தொடர்ச்சியாக மாணவர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்த உலக நாயகன் கமல்ஹாசன், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.