நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - கண்ணதாசன் 35வது நினைவு தினம் இன்று

 
Published : Oct 17, 2016, 10:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - கண்ணதாசன் 35வது நினைவு தினம் இன்று

சுருக்கம்

காற்றில் கார்பண்டை ஆக்சைடும், ஆக்சிஜனும் இருக்கிற வரை கண்ணதாசனின் வரிகளும் இருக்கும். அந்த அளவுக்கு தனது கவித்துவமான வரிகளால் மக்கள் மனதை உருகவைத்து, நிமிர வைத்து , அழவைத்து , நம்பிக்கையூட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாக கவியரசராக வலம் வந்தவர்.

எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்த அச்சம் என்பது மடமையடா பாடல் இவர் இயற்றியதே. இவரது சமகாலத்தவராக இவரது பாணியிலேயே பாடல் எழுதிய கவிஞர் வாலி பட வாய்ப்புகள் கிடைக்காமல் சோர்ந்துபோய் ஊருக்கே சென்றுவிடலாம் என்று கிளம்பிய போது கவிஞர் கண்ணதாசனின் ஒரு பாடல் அவரை நம்பிக்கை ஊட்டி மீண்டும் தனது முயற்சியை தொடர வைத்தது என பல பேட்டிகளில் வாலி குறிப்பிட்டுள்ளார். அந்த பாடல் மயக்கமா கலக்கமா , மனதிலே குழப்பமா என்ற பாடலாகும்.

கண்ணதாசனுக்கு இன்னொரு சிறப்பு தத்துவப்பாடல்களை யார் எழுதியிருந்தாலும் மக்கள் அதை கண்ணதாசன் எழுதியதாகவே கருதினார்கள். இது பற்றி கவிஞர்  வாலியே ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். அது எம்ஜிஆர் படத்திற்காக வாலி எழுதிய பாடல் ஒன்று கண்போன போக்கிலே கால் போகலாமா என்ற பாடல் . அந்த பாடலை கண்ணதாசன் எழுதினார் என்று மனோரமா மேடையிலே பாராட்டினாராம். பிறகு வாலி போன் போட்டு அது நான் எழுதியது என்று விளக்கினாராம். 

பின்னர் காலப்போக்கில் தனது பல பாடல்களை கண்ணதாசன் எழுதியது என்றே மக்கள் எண்ணினார்கள், தத்துவப்பாடல் என்றால் அவர்தான் எழுதுவார்கள் என்று நம்பினார்கள் அது எனக்கும் பெருமை தான் என்று பின்னாளில் வாலி குறிப்பிட்டுள்ளார். இதற்கு இன்னொரு உதாரணம் திருவிளையாடல் படத்தில் வரும் பார்த்தா பசுமரம் படுத்துகிட்டா நெடுமரம் பாடல். அது கவி க.மு.ஷரிப் எழுதிய பாடல். ஆனால் கண்ணதாசன் எழுதியதாகத்தான் அனைவரும் நம்பினர்.  

மனிதன் மாறவில்லை அவன் மயக்கம் தீரவில்லை , போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே போன்ற தத்துவ பாடல்கள். பறவையை கண்டான் விமானம் படைத்தான், எதனை கண்டான் மதம் தனை படைத்தான் என்ற சமுதாய கோபத்தை ஆரம்பத்தில் திராவிட கட்சியில் இருந்த போது எழுதிய கண்ணதாசன் 1961 க்கு பிறகு திமுகவிலிருந்து விலகினார். 

தனது நாத்திக கருத்துக்களிலிருந்து விலகி ஆத்திகத்தில் கலந்தார். கண்ணதாசன் திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர். திமுகவின் தீவிர தொண்டர் , கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு  பல மாதங்கள் சிறையில் இருந்துள்ளார்.

கண்ணதாசன் பாடல்களில் அதிகம் ராமாயணம் , மகாபாரதம் சங்க இலக்கியங்களின் தாக்கம் அதிகம் இருக்கும். அறிவை கொடுத்ததோ துரோணரின் கவுரவம் அவர்மேல் தொடுத்ததே அர்ஜுனன் கவுரவம் என மகாபாரத காட்சியை அழகாக கவுரவம் படத்தில் பயன்படுத்தியிருப்பார்.

எம்ஜிஆருக்காக தேவர் பிலிம்ஸ் படத்திற்காக ஏராளமான பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். எம்ஜிஆர் சிவாஜிக்காக இவர் எழுதிய பாடல்கள் வைர வரிகளாகும். சில பாடல்களில் நடித்தும் இருக்கிறார். சொந்தமாக கருப்பு பணம் என்ற படத்தையும் எடுத்துள்ளார். அதில் அவர் ஒரு காட்சியில் பாடுவது அவருக்காகவே எழுதிய வரிகளாக அமைந்துவிட்டது. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு , நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று பாடுவார். 

காலம் கடந்து நிற்கும் பாடல் வரிகளால் நிரந்தரமாக அழிவில்லாமல்தான் கண்ணதாசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்கள் அனைவருடனும் பழகியவர் கண்ணதாசன். பாடல் மட்டுமல்ல பல நாவல்களை, காவியங்களை படைத்துள்ளார். வனவாசம் அவரது சிறந்த வாழ்க்கை வரலாறு. 

அர்த்தமுள்ள இந்து மதம் அருமையான படைப்பு இதுபோல் எண்ணற்ற நூல்களை எழுதிய கண்ணதாசன் சொந்தமாக தென்றல் என்ற பத்திரிகையும் நடத்தினார். கதை திரைக்கதை, நாடகம், கவிதை நூல் , மொழிபெயர்பு நூல் , வாழ்க்கை வரலாறு என அவர் தொடாத பகுதிகளே எழுதாத தலைப்புகளே இல்லை எனலாம். கண்ணதசனின் கவிதை தொகுப்புகள் ஏராளமான பாகங்கள் வந்துள்ளன. சேரமான் காதலி என்ற வரலாற்று நூலுக்கு சாகித்ய அகடாமி விருதும் கிடைத்தது. 

சோதனை மேல் சோதனை என்ற பாடலை எழுதிய கண்ணதாசனுக்கு அரசியல் வாழ்க்கை சோதனை கட்டமாக அமைந்தது .அதற்கு காரணம் அவரது குழந்தை மனம் எதையும் வெளிப்படையாக பேசும் குணம் தான். ஆனால் குடும்ப வாழ்க்கையில் மூன்று மனைவிகள், 16 குழந்தைகள் உண்டு. சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்து கொண்டே அழுகின்றேன் என்று எழுதிய கண்ணதாசன் எல்லோரையும் அழவைத்து 1981 ஆம் ஆண்டு , இதே நாளில் அமெரிக்காவில் சிகிச்சைக்கு சென்றவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவர் கடைசியாக எழுதிய திரைப்படபாடல் மூன்றாம் பிறையில் வரும் கண்ணே கலைமானே என்ற பாடல் ஆகும். 

கண்ணதாசன் எழுதிய பல நூல்களில் போய் வருகிறேன் என்ற நூலும் ஒன்று. அவர் உலகத்தை விட்டு போனாலும் பாடல் வரிகளால் தினம் தினம் நினைத்து பார்க்கப்படுகிறார்.- முத்தலீஃப்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!