
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தால் பலன் இருக்கும் அதே சமயத்தில், எத்தனை பேரின் வேலை பறிபோகும் என்கிற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் சினிமாத் துறையில் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. AI மட்டுமே பயன்படுத்தப்பட்ட கன்னட மொழியில் உருவான ‘ஐ லவ் யூ’ என்கிற திரைப்படம் கடந்த 16-ம் தேதி வெளியானது.
90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் வெறும் ரூ.10 லட்சம் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களையும் செயற்கை நுண்ணறிவு (AI) இசையமைத்துள்ளது. கதாநாயகன், கதாநாயகி மற்றும் பிற கதாபாத்திரங்கள் அனைத்தையும் AI-தான் உருவாக்கியுள்ளது. இந்திய திரைப்படங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. ஆனால் முழுக்க முழுக்க AI தொழில்நுட்பம் மூலம் உருவான இந்த படத்திற்கு மத்திய அரசு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு, அது பொதுமக்கள் பார்வைக்கும் வெளியானது.
பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் சுமார் 30-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளார். இந்த படத்தின் இசை, காட்சிகள், கதாபாத்திரங்கள் ட்ரோல் பாணி காட்சிகள் என அனைத்தும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு, கலை, சண்டை பயிற்சி அனைத்தும் AI ஆல் செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது. பாடல் வரிகள், கதை, திரைக்கதை, இறுதி எடிட்டிங் மட்டுமே மனிதர்கள் செய்துள்ளனர். ஆறு மாதங்களில் வெறும் ரூ.10 லட்சம் மட்டுமே இந்த படத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.
படத்தின் கதை குறித்து பார்த்தால் நூதன் என்னும் பாடகர் மணாலிக்கு சுற்றுலா செல்கிறார். அங்கு அஸ்வினி என்னும் பாடகியை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? அவர்கள் காதலில் வெற்றி பெற்றார்களா? என்பது தான் கதை. AI என்பதால் வாய் அசைவு மற்றும் பிற பிரச்சனைகளால் வசனங்கள் குறைவாகவே உள்ளன. 12 பாடல்கள் இடம் பெற்றிருப்பதால் பெரும் பகுதி பாடல்களையே சார்ந்துள்ளது. எதார்த்தமான காட்சிகள் இல்லை. காதல் காட்சிகளில் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள் இல்லை. அனிமேஷன் படங்கள் போலவும் இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது
நல்ல திரைப்படங்கள் உருவாவதற்கு நல்ல கதையும், சிறந்த தொழில்நுட்பமும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உண்மையான மனிதர்களும் அவசியம் என திரை விமர்சகர்கள் கூறியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு ஆபத்தானதாக மாறி வருகிறது. இது மனிதர்களின் வேலையை பறிப்பதோடு மட்டுமின்றி செயற்கை தனத்தையும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும் அதை அளவோடு பயன்படுத்துவது பலன்களைத் தரும். அளவுக்கு மீறினால் எதுவானாலும் அது நஞ்சு தான்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.