
தெற்கேயும் போக முடியாமல், வடக்கேயும் நகர முடியாமல் தமிழகத்தை புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிற ’பஸ் ஸ்டிரைக்’ விவகாரத்தை விட தமிழன் பயந்து நடுங்கியது வரும் 30_ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் அறிவித்திருந்ததுதான். அதுவும் ஒரு நாள் ஸ்டிரைக் இல்லை காலவரையற்ற வேலை நிறுத்தம்.
சினிமாவே வாழ்க்கை என்று பவுடர்களின் பின்னால் பரதேசியாய் அலைகின்ற ரசிகர்கள் கூட்டத்துக்கு விஷாலின் இந்த அறிவிப்பானது வாழ்க்கையையே சூன்யமாக்கியது. ’பாகுபலியை இன்னும் மூணாவது வாட்டி பார்க்கலியேடா அதுக்குள்ளே ஸ்டிரைக் அறிவிச்சிட்டாங்களே!’ என்று புலம்பி தவித்தான் கலா ரசிகன்.
இந்நிலையில் இவர்களின் துயர் தீர்க்கும் அறிக்கை ஒன்றை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘’வருகின்ற 30_ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்று வரும் செய்திகள் உண்மையல்ல. செவ்வாய்க்கிழமையும் அதன் பிறகும் வழக்கம்போல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கங்களும் இயங்கும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சரி, விஷால் டீம் ஏன் இந்த ஸ்டிரைக்கை அறிவித்தார்கள் தெரியுமா?...”திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க தற்போது இருப்பதை விட போலீஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்தி ஆயிரம் போலீஸாருடன் கூடிய சிறப்பு கண்காணிப்பு படையை உருவாக்க வேண்டும், புதிய படங்களை ஒளிபரப்பும் கேபிள் டி.வி. மற்றும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் நிறைவேற்ற சொல்லி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் டைம் கொடுத்திருந்தார்கள்.
இரு அரசுகளும் விஷால் வழங்கிய பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி அதற்குள் கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தாலேயே ஸ்டிரைக் துவங்குவதாக இருந்தது.
இதைக்கண்டுதான் தமிழன் தூக்கம் வராமல் அரற்றிக் கொண்டிருந்தான்.
இந்நிலையில்தான் வயிற்றில் பாலை வார்த்திருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க அறிவிப்பின் மூலம் அகமகிழ்ந்திருக்கிறது தமிழகம். எனவே எந்த தங்கு தடையுமில்லாமல் வேலை வெட்டி பொழப்புகளை விட்டுவிட்டு வழக்கம்போல் போய் சம்பாதித்த பணத்தை தியேட்டர்களில் கொட்டலாம்.
மழை பெஞ்சா என்ன பெய்யலேன்னா என்ன? பஸ் ஓடுனா என்ன ஓடலைன்னா என்ன? டாக்டருங்க வேலை பார்த்தா என்ன பார்க்கலேன்னா என்ன? நமக்கு தியேட்டரல்லவா முக்கியம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.