பாடிப் பறந்த நிலா…. பாடும் நிலா, பாட்டுடைத் தலைவன் எஸ்.பி.பி.-யின் முதலாமாண்டு நினைவு தினம்…!

By manimegalai aFirst Published Sep 25, 2021, 10:07 AM IST
Highlights

இந்திய மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது கந்தர்வக் குரலால் கட்டிப்போட்டிருந்த பாடும் நிலா, பாட்டுடைத் தலைவன் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று (25-09-20201).

இந்திய மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது கந்தர்வக் குரலால் கட்டிப்போட்டிருந்த பாடும் நிலா, பாட்டுடைத் தலைவன் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று (25-09-20201).

ஆந்திராவில் பிறந்து பள்ளிக் காலங்களில் பாடல்கள் மீது ஆர்வம்கொண்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.-யை சேரும். எஸ்.பி.பி.-யை சினிமாவுக்குள் இழுத்துவந்த பெருமை அவரது ஆருயிர் தோழி ஜானகிக்கே உரிமையானதாகும்.

டி.எம்.எஸ். குரலை ஈடுசெய்ய இனியொரு பாடகர் கிடைக்கப்போவதில்லை என்று பேசப்பட்ட காலக்கட்டத்தில் அதனை தன்னுள்ளே வைத்திருந்த எஸ்.பி.பி. பாடல் வாய்ப்புகளுக்காக ஸ்டுடியோக்களின் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கிக்கொண்டிருந்தார். எஸ்.பி.பி.-யை வைத்து எம்.எஸ்.வி. ரெக்கார்டிங் செய்த முதல் இரண்டு பாடல்களும், திரைக்கு வரமாலேயே முடங்கியது. இதையடுத்து அன்றைய சூப்பர்ஸ்டார் எம்.ஜி.ஆர்-க்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. எம்.ஜி.ஆர்-க்கு முதல் பாடலைப் பாடிய எஸ்.பி.பி. பின்நாட்களில் இந்தியாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் உருவாக முக்கிய காரணமாக மாறிப்போனார். ஆம்…. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் படங்கள் அனைத்திற்கும் முதல் பாடலை பாடியது எஸ்.பி.பி. தான்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பி. ஆரம்ப காலத்தில் தமது உச்சரிப்புக்காக வாய்ப்பு மறுக்கப்பட்ட எஸ்.பி.பி. முதல் பாடலில் இருந்து தமது மறைவு வரை 54 ஆண்டுகள் அனைத்து மொழிகளையும் சிறப்பாக உச்சரித்துச் சென்றார்.    

காதல் தோல்வியா, காதல் வெற்றியா… திருமணமா.. பிரிவா… பிறப்பு.. இறப்பு என மனித வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து சுக, துக்கங்களிலும் எஸ்.பி.பி.-யின் குரல் இரண்டற கலந்துள்ளது. அனைத்து மொழிகளிலும் கலக்கிய எஸ்.பி.பி.-க்கு ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது அவரின் பன்மொழி திறனுக்கு சான்று. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பி. உலகின் அதிக பாடல்களை பாடிய சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனைக்கும் அவரே சொந்தக்காரர்.

சங்கீதத்தில் வெற்றிக்கொடி நாட்டிய எஸ்.பி.பி. இசையமைப்பாளராக, குணச்சித்திர நடிகராகவும் வெற்றி பெற்றவர். 1991 ஆம் ஆண்டு எஸ் பி பாலசுப்ரமணியம் இசையமைத்து நடித்து வெளியான சிகரம் திரைப்படத்தில் நடிப்பு இசை என இரண்டு துறைகளிலுமே தனது புலமையையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தியிருப்பார் எஸ்பிபி. எம்.எஸ்.வி. காலத்தில் தொடங்கி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வரை அனைத்து தலைமுறை இசைக்கும் தனது குரலால் வலு சேர்த்தவர் அனிருத் காலக்கட்டத்திலும் தனது காந்தவர்க் குரலால் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தார்.

சங்கீத ஜாதி முல்லை, கேளடி கண்மணி, மண்ணில் இந்த காதலன்றி, சத்தம் இல்லாத தனிமைக் கேட்டேன், இப்படி எஸ்.பி.பி-யின் உங்களுக்கு பிடித்த பாடல்களை அடுக்கத் தொடங்கினால் அவர் பாடிய 40 ஆயிரம் பாடல்களும் பட்டியலில் இடம்பெறும் என்பதே அவர் தொட்ட உச்சம்…

காந்தர்வக் குரலால் விருதுகளை குவித்த எஸ்.பி.பி.-யை கொடிய உயிர்க்கொல்லியான கொரோனா நம்மிடம் இருந்து பிரித்துச் சென்றது. எஸ்.பி.பி.-யின் தேகம் மறைந்தாலும் இசையால் நம்முடன் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்.

click me!