கோடிகளை குவித்த சிவகார்த்திகேயனின் டாக்டர்.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ட்வீட்டர் பதிவு

By manimegalai aFirst Published Nov 2, 2021, 2:33 PM IST
Highlights

டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில்  வெளியாகி 25 நாட்களில் 100 கோடி வசூலை குவித்திருப்பதாக  கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தெரிவித்துள்ளது.....

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமான  சிவகார்த்திகேயன், தனது நகைச்சுவை கலந்த இயல்பான பேச்சாலும், மிமிக்கிரி திறமையாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், தனது திறமைகளை மெருகேற்றி  நடிகராக தன்னை தரம் உயர்த்திக்கொண்டவர்.

சிவகார்த்திகேயனின் முதல் திரைப்படமான மெரினா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடித்த மனம்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, மான் கராத்தே, ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் மூலம் அறிமுக ஹீரோவாக இருந்த சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக மக்கள் மனதில் பதிய துவங்கினார். அதோடு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுக பாடலை பாடி பாடகராகவும் உருமாறிய சிவகார்த்திகேயன், பின்னர் மான் கராத்தே படத்தின் "ராயபுரம் பீட்டர்", காக்கி சட்டை படத்தில் "ஐம் சோ கூல்" பாடலை பாடி புகழ் பெற்றார். பின்னர் 2018ம் ஆண்டு கோலமாவு கோகிலா படத்தில் "கல்யாண வயசு" பாடலுக்கு பாடலாசிரியராக பணியாற்றி புகழ் பெற்றார்.

2018-ம் ஆண்டு கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்த எஸ்.கே...  நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, டான், வாழ், உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தற்போதும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸும் இணைந்து டாக்டர் படத்தை தயாரித்துள்ளனர்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில்  பிரியங்கா மோகன், யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகும் முன்பே பாடல்கள் மூலம் மிக பிரபலமான டாக்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த மாதம்( அக்டோபர்) 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் தரமான வரவேற்புகளை பெற்று வருகிறது. நகைச்சுவை கலந்த ஆக்சன் படமாக உருவாகியுள்ள டாக்டர் 25 நாட்களை கடந்துள்ளது. 

இந்நிலையில் டாக்டர் திரைப்படம்  இதுவரை பெற்றுள்ள தியேட்டர் வசூல் குறித்த விவரத்தை அதன் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதன்படி மூன்று வாரங்களில் 100 கோடி தியேட்டர் வசூலை டாக்டர் படம் தாண்டியுள்ளதாகவும், இந்த மாபெரும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த  ரசிகர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு  நன்றி என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்திருந்த ரெமோ படம் தமிழக திரையரங்குகளில் 50 கோடிகளைத் தாண்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாக  டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை குவித்த சிவகார்த்திகேயனின்  முதல் படம் என்ற பெருமையைப் பெற்றும் கொடுத்துள்ளது.

click me!