ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்! கமல்ஹாசன் வெளியிட்ட தகவல்!

Published : Apr 21, 2021, 04:02 PM IST
ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்! கமல்ஹாசன் வெளியிட்ட தகவல்!

சுருக்கம்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியா வெகுவிரைவில் முதலிடம் பிடித்து விடும் என கணிக்கிறார்கள் நிபுணர்கள்.   

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியா வெகுவிரைவில் முதலிடம் பிடித்து விடும் என கணிக்கிறார்கள் நிபுணர்கள். 

மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. ரெம்டேஸீவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம். 

பெரிய பெரிய தலைவர்கள் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை நாளுக்கு நாள் தொற்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை. 

பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வருபவர்களிடம் மது, புகை போன்ற பழக்கம் இருக்கிறதா என்பது பற்றியோ, உடல்நிலையைப் பற்றியோ, வழக்கமாக உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றியோ கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. குறைந்த பட்சம் இரத்த அழுத்தம் கூட பார்க்கப்படுவதில்லை. ஊசி போட்டபின் போனில் அழைத்து கூட உடல்நலம் குறித்து விசாரிக்கப்படுவதில்லை. முதல் தவணை முடிந்து இரண்டாவது தவணை தடுப்பூசி போடச் சென்றால் மருந்து கையிருப்பு இல்லை என்கிறார்கள்.

தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின் உடல்நிலையில் ஏற்படும் ஆபத்தற்ற பக்கவிளைவுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி குறித்த அச்சமும் பரவலாக நீடிக்கிறது.  
உலகமே மருந்துக்குத் திண்டாட ஏப்ரல் 11-ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய 54,28,950 தடுப்பூசிகளில் 12.10% வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பற்பல விதிமுறைகளை விதிப்பவர்கள் டாஸ்மாக் கடைகளென்று வந்துவிட்டால் கரிசனத்துடன் அணுகுவதும் ஏற்புடையதல்ல. தேர்தல் முடிவை எதிர்பார்த்து முடங்கிக்கிடக்கிறதோ தமிழக அரசு எனும் ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. 

என் சகோதரருக்கே படுக்கை கிடைக்கவில்லை என மத்திய அமைச்சர் ட்வீட்டுகிறார். மாநிலங்கள் கொரானா பரவலைக் கட்டுப்படுத்தாமல், எங்களிடம் வந்து மருந்து கேட்டால் எப்படி என்கிறார் இன்னொரு அமைச்சர். முன்நின்று நாட்டைக் காக்க வேண்டிய பிரதமரோ தேர்தல் பிரச்சாரம் செய்து ஓய்ந்த இடைவேளையில் ‘ஊசி போடும் திருவிழா’, ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ என விதம் விதமான ஃபேன்ஸி பெயர்களைச்  சூட்டிக்கொண்டிருக்கிறார். 

மாநில அரசுகள் மருந்து கொள்முதல் செய்வதில் முழுச் சுதந்திரம் இன்னமும் அளிக்கப்படவில்லை. தீர்வுகளைத் தரமுடியாதவர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது. ஆளாளுக்கு அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல என்பதைப் புரிந்துகொண்டு முன்னகர வேண்டும். 

மத்திய மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஒத்திசைவுடன் தெளிவான திட்டமிடலுடன் செயல்பட வேண்டிய தருணம் இது.  அரசின் ஒவ்வொரு அலகும் கொரோனா நோய்த்தொற்றைக்  கட்டுப்படுத்துவதிலும், நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும் சிறு பிசகும் இல்லாமல் செயல்பட்டாக வேண்டும்.  ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்! என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!