கும்பகோணத்தில் பிறந்து இன்று உலகை வியக்கும் மாபெரும் இயக்குனராக திகழ்ந்துவரும் ஒருவர்தான் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.
தளபதி விஜய் அவர்களின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் மூலமாக திரையுலகப்பிரவேசம் அடைந்தவர் சங்கர். அவர் இயக்குனராக ஆவதற்கு முன்பாகவே, சந்திரசேகர் அவர்களுடைய பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்.
அதன் பிறகு ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார். சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜூலை 30ம் தேதி சங்கர் அவர்களுடைய ஜென்டில்மேன் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தனது முதல் படத்திலேயே மக்களின் ஆதரவை பெற்ற அவர், தொடர்ச்சியாக காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ் என்று பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து மக்கள் மனதில் அழிக்க முடியாத இடத்தை பிடித்தார்.
ரஜினிகாந்த் அவர்களுடன் சிவாஜி, எந்திரன் மற்றும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இவர் இயக்கியுள்ளார். 1996ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக கடந்த 2018ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை இயக்கி வெளியிட்ட பிறகு, கடந்த ஐந்து ஆண்டு காலமாக தன்னுடைய இந்தியன் 2 படத்திற்காகவும், ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் Game Changer திரைப்படத்திற்காகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று தமிழ் சினிமாவில் தனது முப்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் அவருடைய மகளும், நடிகையுமான அதிதி சங்கர் அவர்களும் தன்னுடைய தந்தையை புகழ்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.