
’பிக்பாஸ்’ இல்லத்தில் லாஸ்லியாவிடம் ஒரு அப்பாவாக போலியாக நடிக்கவில்லை. அப்படி நடித்திருந்தால் நான் இந்த உலகத்தில் வாழவே அருகதையற்றவன் என்று அர்த்தம்’என்று தனது விமர்சகர்களுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்தார் இயக்குநர் சேரன்.
பிக்பாஸ் இல்லத்தில் 91 நாட்கள் வரை இருந்த சேரன் மற்ற போட்டியாளர்களிடம் பக்குவமாக, முதிர்ச்சியுடன் நடந்துகொண்டார் என்று பொதுவாகக் கருத்து சொல்லப்பட்ட நிலையில், லாஸ்லியாவிடம் அவர் தந்தை போல் பழகியதை குறிப்பாக அவரைக் கட்டி அணைத்து பாசம் பொழிந்ததை ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அது குறித்து கடுமையான விமர்சனங்களை பலர் தங்கள் வலைதலங்களில் பதிவு செய்தனர்.
அந்த கடுமையான விமர்சனங்களுக்கு பதில் சொல்வதற்கு தனது அடுத்த ரிலீஸான ’ராஜாவுக்கு செக்’பட மேடையைப் பயன்படுத்திக் கொண்டார் சேரன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சேரன் பேசும் போது, ’வாழ்க்கையில் நான் அப்பா என்று உணர்கின்ற தருணம் மிகவும் உன்னதமானது. அதை கடவுள் எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அப்பாவாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் உண்மையாக மிக நேர்மையாகவே இருந்தேன். போலியாக நடிக்கவில்லை. அப்பா - மகள் பாசத்தை நான் பொய்யாக காண்பித்தேன் என்றால் இந்த உலகத்தில் வாழ்வதற்கே அருகதை இல்லாதவன்.தந்தை மகளுக்கான பாசத்தில் அளவீடு ஏது.. காலம்தான் சொல்லும் எது உண்மை எவ்வளவு உண்மையென...’என்று உணர்ச்சி வசப்பட்டார்.
பல்லட்டே கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சாய் ராஜ் குமார் இயக்கியுள்ளார். இதில் இர்ஃபான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் தயாராகி ஓராண்டுக்கும் மேல் ஆன நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனுக்குக் கிடைத்த புகழ் வெளிச்ச புண்ணியத்தால் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.