
இதுவரை இல்லாத அவமானத்தை இயக்குநர் பாலாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது அவர் தமிழில் இயக்கிய வர்மா. விக்ரம் மகன் துருவை அறிமுகம் செய்து வர்மா திரைப்படத்தை இயக்கி முடித்தார் பாலா. ரிலீசுக்கு தயாரான நிலையில், அந்தப்படத்தை மீண்டும் வேறொரு இயக்குநரை வைத்து எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது வர்மா படத்தை தயாரித்துள்ள இ-4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம்.
இதுகுறித்து தயாரிப்பாளர் முகேஷ் ஆர்.மேத்தா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘’ இ-4 எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக தெலுங்கில் தயாரித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் பதிப்பை பாலாவின் பிஸ்டுடியோவுக்கு முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து இயக்க ஒப்பந்தம் செய்தோம். வர்மா என்கிற பெயரில் படம் தமிழில் பாலா இயக்கி முடித்துள்ளார்.
படப்பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு ரிலீஸ் செய்ய எங்களிடம் ஒப்படைத்தார். திரையிட்டு பார்த்தபோது எங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தி இல்லை. தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தில் இருந்த பல விஷயங்கள் வர்மா படத்தில் இல்லை. உயிர்ப்பான சிந்தனை இல்லை. ஆகையால் இந்தப்படத்தை நாங்கள் வெளியிடப்போவதில்லை என முடிவு செய்துள்ளோம். உடனடியாக மற்றொரு இயக்குநரை வைத்து புதிதாக அர்ஜூன் ரெட்டி தமிழ் பதிப்பில் ஷூட்டிங்கை ஆரம்பிக்க உள்ளோம். அதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக மீண்டும் நடிப்பார். அர்ஜூன் ரெட்டி படத்தின் உயிர்ப்பும், உண்மைத் தன்மையும் அந்த பதிப்பில் இருக்கும். அதிகாரப்பூர்வமாக படக்குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
பலகோடிகளை செலவழித்து பெரும் பொருட்செலவில் இந்தப்படம் தயாரிக்கப்பட்டாலும், பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருந்தாலும் வேறு வழியே இல்லாமல் இந்தப்படத்தை நிறுத்தும் முடிவை தவிர்க்க முடியவில்லை. நாங்கள் தொடங்க உள்ள இந்தப் படத்தை 2019 ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்திய சினிமாவிலே இல்லாத அளவுக்கு இந்த அறிவிப்பு திரையுலகினரிடையே அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது. தேசிய விருது பெற்ற பாலாவின் படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அப்படிபட்ட பாலா இயக்கத்தில் உருவான ஒரு படத்தை இயக்கிய முறை சரியில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து அந்த படத்தை நிராகரித்து விட்டு மற்றொரு இயக்குநரை விட்டு இயக்க போவதாக கூறியிருப்பது பாலாவுக்கு கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.