#BREAKING சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றது ‘அசுரன்’... நடிகர் விஜய் சேதுபதிக்கும் விருது...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 22, 2021, 4:53 PM IST
Highlights

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து, கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன்.

67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2013ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து, கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 100 நாட்களை கடந்து ஓடிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. 

இந்நிலையில் அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக ஏற்கனவே தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். நார்வே திரைப்பட விழா, ஆனந்த விகடன் சினிமா விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை தொடர்ந்து அசுரன் திரைப்படம் 2020ம் ஆண்டுக்கான சர்வதேச பனோரமா திரைப்பட விருதுக்கும் தேர்வானது குறிப்பிடத்தக்கது. 

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், விஸ்வாசம் படத்தில் இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் இமானுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கே.டி. என்கிற கருப்புதுரை படத்தில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரம் நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.  

click me!