விமர்சனம்...டியர் காம்ரேட்....விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கா?

By Muthurama LingamFirst Published Jul 27, 2019, 2:38 PM IST
Highlights

‘உனக்குத் தேவையானவற்றை நீயேதான் போராடிப் பெறவேண்டும். உன் வாழ்வின் இறுதிவரை யார் உன் போராட்டத்திற்கு தோள்கொடுத்து துணை நிற்கிறாரோ அவர்தான் காம்ரேட். இப்படி இரண்டு வரிச் செய்திகளை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி முதல் காஷ்மீர் வரை பயணிக்கும் ஒரு வித்தியாசமான முயற்சிதான் அறிமுக இயக்குநர் பரத் கம்மாவின் ‘டியர் காம்ரேட்’.

‘உனக்குத் தேவையானவற்றை நீயேதான் போராடிப் பெறவேண்டும். உன் வாழ்வின் இறுதிவரை யார் உன் போராட்டத்திற்கு தோள்கொடுத்து துணை நிற்கிறாரோ அவர்தான் காம்ரேட். இப்படி இரண்டு வரிச் செய்திகளை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி முதல் காஷ்மீர் வரை பயணிக்கும் ஒரு வித்தியாசமான முயற்சிதான் அறிமுக இயக்குநர் பரத் கம்மாவின் ‘டியர் காம்ரேட்’.

தூத்துக்குடியில் வசித்து வருகிறார் நாயகன் விஜய் தேவரகொண்டா. இவரது தாத்தா சாருஹாசன் காம்ரேட்டாக இருக்கிறார். காம்ரேட் என்றால் எதற்கும் அஞ்சாமல், போராடுபவர்கள் என்று அர்த்தம். இந்த கொள்கையை பின்பற்றி கல்லூரியில் படிக்கும் விஜய் தேவரகொண்டா மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்து போராடி வருகிறார்.இந்நிலையில், ஒரு திருமணத்தில் கலந்துக் கொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருகிறார் நாயகி ராஷ்மிகா. இவருடன் பழகும் விஜய் தேவரகொண்டாவுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. திருமணம் முடிந்து சென்னைக்கு செல்லும் நிலையில், ராஷ்மிகாவிடம் தன்னுடைய காதலை சொல்லுகிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால், ராஷ்மிகா விஜய்யின் காதலை ஏற்க மறுத்துவிடுகிறார்.

நாளடைவில் விஜய்யின் காதலை ஏற்றுக் கொள்கிறார் ராஷ்மிகா. வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் எம்.எல்.ஏ. தம்பியுடன் விஜய்க்கு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் விஜய்க்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த விஷயத்தில் ராஷ்மிகாவும் விஜய்யுடன் காதலை முறித்துக் கொள்கிறார்.அதே வேளையில் கிரிக்கெட்டில் தேசிய லெவலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ராஷ்மிகாவிற்கும் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.இறுதியில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலில் இணைந்தார்களா? ராஷ்மிகாவின் பிரச்சனை என்ன? படத்தின் ஒரிஜினல் வில்லன் யார்?? அவரை இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள் என்று போகிறது கதை.

சில குறிப்பிட்ட காலங்களில் சில காதல் ஜோடிகளின் கெமிஸ்ட்ரி அப்படி ஒர்க் அவுட் ஆகும்.இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையில் கெமிஸ்ட்ரி மட்டுமல்ல ஹிஸ்டரி,ஜியாகிரபி, பிசிக்ஸ் என்று என்னென்னெவோ ஒத்துப்போகின்றன. காதல் காட்சிகளில் கரைந்து, நிறைந்து தளும்பி நிற்கிறார்கள். அதிலும்  சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனத்தை ஈர்த்திருக்கிறார் ராஷ்மிகா.

முதல் பாதி காமெடி, காதல், கொஞ்சம் ஆக்‌ஷன் என்று திரைக்கதை நகர, இரண்டாம் பாதி செண்டிமெண்ட், மெசேஜ் என்று நகர்ந்திருக்கிறார் இயக்குனர் பாரத் கம்மா. ஆண்களால் பெண்கள் சவாலை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். இடைவேளைக்குப்ப்பிறகு படம் பார்க்கும் போது நீண்ட நேரம் செல்வது போல் இருக்கிறது. படத்தின் நீளம் 169 நிமிடங்களாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். டைரக்டரிடம் கெஞ்சிக் கூத்தாடி எடிட்டராவது கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம்.

மதுரை மண்ணின் மைந்தன் ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசையில் வெளுத்து வாங்கி இருக்கிறார். காட்சிகளை தனது கேமரா மூலம் அழகாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சராங்குக்கு ஒரு ராயல் சல்யூட். ஒரு ‘மி டு’ விவகாரத்தை பிரச்சாரம் இல்லாமல் சொன்ன வகையில் முதல் படத்திலேயே செஞ்சுரி அடித்திருக்கிறார் இயக்குநர் பரத் கம்மா.

click me!