
தன்னுடன் நடித்த ‘தொரட்டி’ படத்தின் கதாநாயகியை காணவில்லை என்றும் அவரை நேரில் ஆஜர்படுத்தக் கோரியும் அப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஷாமன் மித்ரு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் சினிமாவில் நடிப்பது பிடிக்காததால் பெற்றோர் அவரை எங்கோ ஒளித்துவைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பெருங்களத்தூரைச் சேர்ந்த ஷாமன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ஷாமன் மித்ரு தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது: ‘ஷாமன்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகி வரும் ‘‘தொரட்டி’’ படத்தில் சத்தியகலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், சினிமாவில் நடிப்பது தன்னுடைய தந்தை மற்றும் வளர்ப்பு தாய்க்கு பிடிக்காததால் தனது விருப்பத்திற்கு மாறாக தனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக படக்குழுவினரிடம் சத்தியகலா கூறியதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது படத் தயாரிப்பு பணிகள் முடிந்து படத்தை வெளியிடும் சூழலில் சத்தியகலாவை காணவில்லை. சென்னையில் சத்தியகலா வசித்து வந்த வீட்டில் தேடியபோது அங்கு அவர் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சத்தியகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மனுதாரர் சார்பில் வக்கீல் இந்து கருணாகரன் முறையிட்டார். இதையடுத்து, திங்கட்கிழமை (29ம் தேதி) விசாரிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.