
Soubin Shahir Cheating Case : ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் சிக்கலில் சிக்கி உள்ளார். நீதிமன்ற தீர்ப்பால் துபாயில் நடைபெறும் சைமா (SIIMA) விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார். ‘கூலி’, ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படங்களில் நடித்த சௌபின் ஷாஹிர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சௌபின் தற்போது இடைக்கால ஜாமீனில் உள்ளார். செப்டம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறும் சைமா (SIIMA) விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என சௌபின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தனது தொழில் சார்ந்த கடமைகளுக்காக செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்றும், சர்வதேச அளவில் மலையாள திரையுலகிற்கு தான் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் சௌபின் வாதிட்டார். ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கின் முக்கிய சாட்சி துபாயில் இருப்பதாகவும், சௌபின் வெளிநாடு சென்றால் சாட்சியைப் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சௌபினின் வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டது. இதனால் சௌபின் சைமா விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தார்.
‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பு தொடர்பான வழக்க்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்திற்கு சௌபின், அவரது தந்தை மற்றும் மற்றொரு நபர் தயாரிப்பாளர்களாக இருந்தனர். சிராஜ் என்ற நபர் இந்தப் படத்தில் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும், லாபம் வந்த பிறகு 40 சதவீத பங்கு தருவதாக தயாரிப்பாளர்கள் உறுதியளித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், படம் வெற்றி பெற்ற பிறகும், தனக்குரிய பங்கு வழங்கப்படவில்லை என சிராஜ் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் எர்ணாகுளம் காவல்துறையினர் சௌபின் உட்பட மற்றவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். தற்போது சௌபின் இடைக்கால ஜாமீனில் உள்ளார், விசாரணை தொடர்கிறது.
சௌபின் தனது திரைப்பயணத்தை 2000களில் துணை இயக்குநராகத் தொடங்கினார். பின்னர் நடிகராக மாறி, ‘சுதானி ஃப்ரம் நைஜீரியா’, ‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘கூலி’, ‘மஞ்சுமல் பாய்ஸ்’ போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். குறிப்பாக ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படம் நாடு முழுவதும் பெரும் வெற்றி பெற்றதால் அவரது புகழ் மேலும் அதிகரித்தது. சமீபத்தில் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் செளபின். அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.