வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை தடுத்து நிறுத்திய சில போலீசார் காயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரமாகவே நேரு ஒரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அனைத்து பணிகளும் நிறைவு பெற்று ஆடியோ வெளியீட்டுக்காக விழா மேடை தயாராகி உள்ளது.
மேலும் இதில் ரசிகர்கள் பலர் கலந்து கொள்வதற்காக ஆர்வம் காட்டிய நிலையில், ஆடியோ லான்ச் டிக்கெட் அதிகபட்சமாக 4000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், பல ஊர்களில் இருந்தும் விஜய் ரசிகர்கள் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ளனர். மேலும் இன்று இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் விஜய், ரசிகர்கள் மத்தியில் என்ன பேசுவார்? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் நிலவுகிறது.
மேலும் தளபதி ரசிகர்கள் பலர், விஜய்யை பார்க்க வேண்டும் என, நேரு உள்விளையாட்டு அரங்கில் முன்னர் குவிந்துள்ளனர். மேலும் உரிய அனுமதிச்சீட்டு இல்லாதவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் போலீசாரை மீறி உள்ளே செல்ல முயன்ற போது... போலீசார் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.