
சமீப காலங்களில் சினிமா விழாக்களில் அதிகம் பார்க்க முடியாத வைகைப் புயல் வடிவேலு நேற்று நடந்த ‘கமல் 60’ கலைவிழாவில் ‘தேவர் மகன்’படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த கமல் குறித்த அரிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். தான் இறக்கும் காட்சியில் கமலை விட ஓவராக அழுதபோது சிவாஜி கூப்பிட்டுக் கண்டித்ததாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு,’60 வருஷமா அவர் எவ்வளவு பேரப் பார்த்துருப்பாரு. எத்தனை ஏவுகணைகள் வந்திருக்கும். எத்தனை பாம் போட்டுருப்பாங்க. அதெல்லாம் தாண்டி இங்க வந்து நிக்குறதுன்னா சும்மாவா? அவர் ஒரு பல்கலைக்கழகம். அவருக்கு உதாரணமா ஒருத்தருமே கிடையாது.’தேவர் மகன்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த கமல் ஹாசன், நாளை காலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வாங்க என்று கூறிவிட்டு போய்விட்டார். நான் முதல் இரவே அங்க போயிட்டேன். மறுநாள் காலையில, ’ஏங்க விடிஞ்சதும் தானே உங்கள வரச்சொன்னேன் என்று கேட்டார். அதற்கு நான், நீங்க வாய்ப்பு கொடுத்த போதே, எனக்கு விடிஞ்சிடுச்சி என்றேன். ஏன்னா நான்காவது படத்திலேயே கமல், சிவாஜி என மிகப்பெரிய ஜாம்பவான்களின் நடக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அவரால் தான் கிடைத்தது.
‘தேவன் மகன்’ படத்துல சிவாஜி சார் செத்துடுவாரு. நாங்க அழணும்... நான் கமல் ஹாசனை விட அதிகமாக அழுதேன். உடனே சிவாஜி சார் எழுந்து, யார்ரா... இவன் எனக்கென்ன 2வது மகனா நீ ஏன்டா இப்படி அழுகுற...? வாயில துணியை வச்சிக்கிட்டு தள்ளிப்போய் உட்காருடா என்று கூறினார். அதற்கு பிறகு என்னை தனியாக அழைத்து, நல்லா மதுரை தமிழ் பேசுறான் என்று கூறி முத்தம் கொடுத்தார். அன்றிலிருந்து தான் நான் நடிக்க கற்றுக்கொண்டேன்’என்றார்.
கமல் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதோடு மேடையேறிப்பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டதால் கமலின் ‘தேவர் மகன் 2’வில் வடிவேலு நடிப்பது நிச்சயம் என்கிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.