'காட்மேன்' வெப் சீரிஸ் தொடர்பாக, இயக்குனர், தயாரிப்பாளர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு!

By manimegalai aFirst Published Jun 1, 2020, 2:26 PM IST
Highlights

குறிப்பிட்ட மதத்தினரை அவதூறாக சித்தரித்துள்ளதாக, கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தற்போது 'காட்மேன்' இணையதள தொடரை தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, இதில் நடித்த நடிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

குறிப்பிட்ட மதத்தினரை அவதூறாக சித்தரித்துள்ளதாக, கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தற்போது 'காட்மேன்' இணையதள தொடரை தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, இதில் நடித்த நடிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த வாரம், பிரபல தனியார் தொலைக்காட்சியின்  ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது 'காட்மேன்' டீசர். 

இதில் சாமியார் வேடத்தில் தோன்றிய நடிகர் ஜெயப்ரகாஷ், ஒரு பிராமணர் மட்டும் தான் வேதம்  படிக்க வேண்டும் என எந்த சாஸ்திரம் கூறியிருக்கிறது? என கேள்வி எழுப்பி ’ ‘என்னைச் சுத்தி இருக்குற எல்லா பிராமணர்களும் அயோக்கியர்களாக உள்ளனர்’ என சர்ச்சையான வசனம் பேசினார்.

பின் டானியல் பாலாஜியை ’நீ வேதம் படிக்க வேண்டும் அய்யனார்... என கூறிய பின், டானியல் பாலாஜியின் சில உச்ச கட்ட ஆபாச காட்சிகள் காட்டப்படுகிறது. பின்  ஒரு பிராமணன் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டப்போகிறேன் என கூறுகிறார் ஜெயப்ரகாஷ்.’

இதை தொடர்ந்து, ஜெயப்ரகாஷை போலீசார் அழைத்து செல்லப்படும் காட்சிகள், சோனியா அகர்வால் மிரட்சியுடன் பார்ப்பது போன்ற சில விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 

இதில் குறிப்பாக, ஒரு சமூகத்தினரை அவதூறாக காட்டும் விதத்தில், சர்ச்சை வசங்கள் இடம் பெற்றதால். 'காட்மேன்' வெப் சீரிஸுக்கு எதிராக, அந்தணர்களை அவமதிக்கும் நோக்கத்தில் உள்ளதாக கூறி, காவல் நிலையங்களில் புகார்களும் குவிந்தது. இதனால் பிராமணர் அமைப்புகள் மட்டுமல்லாது, இந்து அமைப்புகளும் காட்மேன் வெப் சீரிஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழக பாஜக சட்டப்பிரிவு மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதே போல் பிரபல நடிகரும், இயக்குனருமான எஸ்.வி.சேகரும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.


 
இதை தொடர்ந்து, அந்த தனியார் தொலைக்காட்சியின் ஓடிடி தளத்தில் இருந்து, 'காட்மேன்' டீசர் அதிரடியாக நீக்கப்பட்டது. எனினும் இந்த வெப் சீரிஸ், ஜூன் 12 ஆம் தேதியில் இருந்து வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்க்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.

இந்நிலையில் தற்போது, 'காட்மேன்' வெப் சீரிஸின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், மற்றும் தயாரிப்பளார் ஆகியயோர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாக சித்தரித்ததாக அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போல் இந்த 'காட்மேன்' வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள, நடிகர் டானியல் பாலாஜி, ஜெயப்ரகாஷ், மற்றும் சோனியா அகர்வால் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!