சர்ச்சை ஏற்படுத்திய 'காட்மேன்' வெப் சீரிஸுக்கு எதிராக பிரபல நடிகர் போலீசில் பரபரப்பு புகார்!

By manimegalai aFirst Published Jun 1, 2020, 1:41 PM IST
Highlights

கடந்த வாரம் பிரபல தொலைக்காட்சியின் சார்பில் தயாரிக்கப்பட்டிருந்த, 'காட்மேன்' என்கிற வெப் சீரிஸ், தொடரின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வெப் சீரிஸுக்கு எதிராக, பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.வி.சேகர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
 

கடந்த வாரம் பிரபல தொலைக்காட்சியின் சார்பில் தயாரிக்கப்பட்டிருந்த, 'காட்மேன்' என்கிற வெப் சீரிஸ், தொடரின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வெப் சீரிஸுக்கு எதிராக, பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.வி.சேகர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட், மற்றும் பாலிவுட் திரையுலகில் மட்டுமே பல ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வந்த, வெப் சீரிஸ் தொடர்கள், தற்போது தமிழிலும் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் வெளியான சில தொடர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. எனினும், வெப் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்கிற காரணத்தால்... கவர்ச்சி காட்டுவதிலும், சர்ச்சை காட்சிகளிலும் வெப் சீரிஸ் தயாரிப்பவர்கள் அத்து மீறி வருவதாகவும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் தொடர்ந்து பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை தாக்கி பேசும் விதத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது 'காட்மேன்' டீசர். இந்த டீசருக்கு எதிராக அந்தணர் அமைப்பை சேர்ந்தவர்களும், இந்து அமைப்பை சேர்ந்தவர்களும் தொடர்ந்து போர் கொடி தூங்கியதால், இந்த டீசர் யூடியூப் பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது.  

இந்த சர்ச்சை தொடர் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல நடிகரும், இயக்குனருமான எஸ்.வி.சேகர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது...  ஜீ தமிழ் டிவி-யின் ஜீ5என்கிற ஓடிடி தளத்தில் வரப்போகும் காட்மேன் என்ற இணைய தொடர் ஒன்றின் டீசர் தன்னை அதிர்ச்சியடைய செய்தது. ஜூன் 12 முதல் ஒளிபரப்பாகும் என தெரிகிறது. அதில் பிராமண சமூகத்தை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருக்கிறது. சாமியார் வேடமிட்ட ஒருவர் பிராமணர்களை அவமதிக்கும் வகையில் வசனம் பேசி நடித்திருக்கிறார். இது ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் உள்ளது. 

இதனால் குறிப்பிட்ட சமுதாயம் தாக்கப்படக்கூடிய சூழலும், பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும் உள்ளது. இது மிகவும் கண்டிக்கதக்கது. இந்த டீசரில் பிராமணர்களைப் பற்றியும் , இந்து மதத்தைப்பற்றியும், மத நம்பிக்கைகள் பற்றியும் தவறான, கொச்சையான வசனங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எந்த ஒரு மதத்தையோ அல்லது சமூகத்தையோ குறிப்பிட்டு அசிங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றம், என்பது தெரிந்ததே.

கடந்த சில காலங்களாக ஒரு குறிப்பிட்ட மதத்தை, ஜாதியை கொச்சைப்படுத்தி பேசும் வசனங்களை ஊடகங்களில் வைப்பது வாடிக்கையாகிவிட்டது. இது மேலும் தொடர்ந்தால் தவறான முன்னுதாரணமாகி தமிழகத்தை வன்முறைக்கு அழைத்து செல்லும். இந்த தொடரில் பணியாற்றியர் மூலமாக கேட்ட தகவல் படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலாவைப் பற்றியும் ஒரு கிறிஸ்துவ போலீஸ் அதிகாரியிடம் சொல்லி செய்யப்பட்ட கைது போன்ற வன்மமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அறிகிறோம். 

இதில் நடித்த ஜெயப்ரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ ரகுபதி, இணை இயக்குனர் ராஜா முகமது, நிர்வாக தயாரிப்பாளர் சுகுமாரன் மற்றும் ஜீ5 சிஇஓ தருண் கதியால் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 153 (A), 504, 505 and தொழில்நுட்ப பிரிவு சட்டம் 2000 ன் 67 ஆகிய பிரிவுகளின் கீழ கைது செய்து, காட்மென் தொடரை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தன்னுடைய புகாரில் கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.
 

click me!