மாணவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய "ரோகிணி" "வெற்றி மாறன்"

First Published Sep 5, 2017, 1:56 PM IST
Highlights
celebrities support student protest


நீட் தேர்வுத் திணிப்பால், மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்கிற  கனவு பல மாணவர்களுக்கு பலிக்காமல் போனது. அப்படி நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவிதான் அனிதா. ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் மருத்துவர் ஆகியே தீர வேண்டும் என பன்னிரெண்டாம் வகுப்பில் 1176  மதிப்பெண்களை எடுத்தார்.

ஆனால் நீட் தேர்வால் இவருடைய மருத்துவராகும் கனவு கலைந்தது. ஒரு நிலையில் தன்னைப் போல் பல மாணவர்கள் பாதிக்கப்படக்  கூடாது என நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நீதிமன்றம் வரை சென்றார். ஆனால் நீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது எனக் கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

அனிதா போராடியபோது இவரின் முயற்சிக்குத் தோள்கொடுக்காத பலர், அவர் இறந்தபின் தானாகவே முன்வந்து நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் எனக் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது சென்னை, புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையிலும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில், நடிகை ரோகிணி மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் மாணவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வது குறித்து நடிகை ரோகிணி கூறுகையில்  "நீட் தேர்வு தற்போதைக்கு மாணவர்களுக்கு அவசியமில்லாதது. உடனடியாக நீட் தேவை தமிழகத்தில் ரத்து செய்யவேண்டும்" நீட் தேர்வால் பல்வேறு மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் அவர்கள் ஆசைப் பட்ட படிப்பைப் படிக்க முடியாமல் போகிறது. தற்போது வரை மாணவர்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில் "அரசுகள் மௌனத்தை கலைக்க வேண்டும்” என்றும் "மாணவர்கள் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்” என்றும் கூறினார். இதே போல்  பிரபலங்கள் பலர் மாணவர்களுக்கு தொடர்ந்து தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!