#Breaking ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு! ஆதரவு கேட்டாரா?

By manimegalai aFirst Published Feb 20, 2021, 1:52 PM IST
Highlights

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், திடீர் என போயஸ் தோட்டத்தில் உள்ள தனது நண்பர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
 

தமிழகத்தில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிடுவது என்கிற பேச்சுக்கு அடிபோட்டுள்ள, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றதோடு,  வாக்கு வங்கி அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரையும் எடுத்தது. அதிலும் குறிப்பாக நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுக்கு மக்களின் ஆதரவு கணிசமாக இருந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத கமல், அப்போது முதல் தனது அரசியல் நடவடிக்கைகளை மிகவும் கவனமாக எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், தற்போது வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகிவருகிறது. ஆனால் இதுவரை யாருடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவோம் என்பதை அறிவிக்காத நிலையில், மூன்றாவதாக ஒரு அணியை அமைத்து போட்டியிடுவது என்ற முடிவில் இருப்பதாக சில பேச்சுவார்த்தைகளும் அடிபட்டு வருகிறது.

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்கிற அறிவிப்பை வெளியிட்ட போது, நட்பு ரீதியாக அவரிடம் அணுகி ஆதரவு கேட்பேன் என கமலஹாசன் கூறியிருந்த நிலையில், இன்று திடீரென போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று கமலஹாசன் நலம் விசாரித்துள்ளார். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த, பாடலாசிரியர் சினேகன் கூறுகையில்... "கமல்ஹாசன் நட்பு ரீதியாக சந்தித்து பேசியதாகவும், அரசியல் ரீதியாக பேசியிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையிலேயே தெரிவித்துள்ளார்". ஒருவேளை கமல் தனக்கு ஆதரவு கேட்டிருந்தால்... ரஜினிகாந்த் தன்னுடைய தரப்பில் இருந்து ஆதரவு தெரிவிப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

click me!