Actor Prithvi Rajan : தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாரிசு நடிகர், நடிகைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் தங்கள் பெற்றோரை போல பலராலும் அவ்வளவு எளிதில் தமிழ் சினிமாவில் சாதிக்க முடிவதில்லை என்றே கூறலாம்.
பிரபல இயக்குனர் பாக்யராஜ் அவர்களுடைய உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் தான் நடிகர் மற்றும் இயக்குனரான பாண்டியராஜன் அவர்கள். கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான பாக்கியராஜின் "அந்த 7 நாட்கள்" திரைப்படத்தின் மூலம் இவர் துணை நடிகராகவும் களமிறங்கினார். அதன் பின் பாக்யராஜ் அவர்களுடைய படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த பாண்டியராஜன், கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான "கன்னி ராசி" என்கின்ற திரைப்படத்தை இயக்கி தன்னை ஒரு இயக்குனராக நிலை நிறுத்திக் கொண்டார்.
அதன் பிறகு இவருடைய இயக்கத்தில் பல வெற்றி திரைப்படங்கள் உருவாக துவங்கியது. இறுதியாக கடந்த 2006 ஆம் ஆண்டு "கைவந்த கலை" என்கின்ற திரைப்படத்தை தனது மகனை வைத்து இயக்கியிருந்தார் பாண்டியராஜன். இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் தனக்கான ஒரு சரியான வாய்ப்பை தேடி தொடர்ச்சியாக நாயகனாக நகர்ந்து வந்தவர் தான் ப்ரித்வி ராஜன்.
இவர் பாண்டியராஜனின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே, மிகப்பெரிய இயக்குனர் மற்றும் நடிகருடைய மகனாக இருந்தும் இவருக்கு பிரேக் கொடுக்கும் அளவிற்கு ஒரு திரைப்படம் இவருக்கு இந்த 18 ஆண்டுகளில் அமையவே இல்லை என்றால் அது மிகையல்ல. இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான "ப்ளூ ஸ்டார்" என்ற படம் மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் மற்றும் பிரித்திவி ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மூவருடைய கதாபாத்திரமும் இந்த திரைப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரித்திவி ராஜன் இந்த ஒரு வெற்றியை ருசிக்க எனக்கு 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்றார்.
இதுவரை பாண்டியராஜனின் மகன் என்று என்னை அழைத்து வந்தனர், அது எனக்கு பெருமை தான் என்றாலும் என்னுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமலே இருந்தது. ஆனால் ப்ளூ ஸ்டார் படம் பார்த்து விட்டு நான் வெளியே சென்றபோது, சாம்.. சாம்.. சாம்.. என்று இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி மக்கள் ஆர்ப்பரித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அப்பொழுது அருகில் இருந்த எனது நண்பர் ஒருவர் இவர்தான் பாண்டியராஜனின் மகன் என்று அதன் பிறகு என்னை அறிமுகம் செய்து வைத்த பொழுது எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன் என்று மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.