BJP vs Zee Tamil : காமெடிக்காக மோடியை சீண்டுவதா? - ‘ஜீ தமிழ்’ மீது ‘பா.ஜ.க’ பாய்ச்சல்

By Ganesh PerumalFirst Published Jan 17, 2022, 10:20 AM IST
Highlights

ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் சிறுவர்கள் செய்த ஸ்கிட் பிரதமர் மோடியின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளதாக பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ் எனும் ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது. இது 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்ச்சியில் மிர்ச்சி செந்தில், பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா, நடிகை சினேகா ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். குழந்தைகளின் மழலைப் பேச்சும், கியூட்டான நடிப்பும் அனைவரையும் கவரும் வண்ணம் இருப்பதால் இந்நிகழ்ச்சி மக்களிடையே பிரபலமாக உள்ளது. 

இந்நிலையில், தற்போது இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று ஒளிபரப்பான ஜுனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில், வடிவேலுவின் புலிகேசி கெட்-அப்பில் சிறுவர்கள் செய்த ஸ்கிட் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த ஸ்கிட்டில் பணமதிப்பிழப்பு, மற்றும் அரசர் நாடு நாடாக சுற்றுவதை நக்கல் நையாண்டியுடன் விமர்சித்து உள்ளனர்.

பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாகவும், அவரது மாண்பை குறைக்கும் வகையிலும் அந்த ஸ்கிட் அமைந்துள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க ஐடி விங் சார்பில் சம்பந்தப்பட்ட ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் அந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தக் கோரியும், அந்த சேனல் நிர்வாகம் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதவிர அந்நிகழ்ச்சியில் நடுவர்களாக இருக்கும் மிர்ச்சி செந்தில், பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா, நடிகை சினேகா ஆகியோரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி உள்ளனர். மேலும் அந்த ஸ்கிரிப்டை தயார் செய்த அமுதவாணனை நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது.

click me!