ரஜினி,கமல்,டெண்டுல்கர்,ஏ.ஆர்.ரஹ்மான் பெயருக்கு முன்னால் பட்டங்களைப் போடக்கூடாது...

By Muthurama LingamFirst Published Feb 13, 2019, 11:19 AM IST
Highlights

சிறந்த சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் ஆகிய பட்டங்களை இனி பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ அல்லது தவறான விளம்பர நோக்கத்துடனோ பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறந்த சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் ஆகிய பட்டங்களை இனி பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ அல்லது தவறான விளம்பர நோக்கத்துடனோ பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டம் பெறுவதே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக்கொள்வதற்குத்தான் எனும் நிலையில் மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பு பிரபலங்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்து மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், ''குடிமக்களில் சிறப்பான சேவை செய்தவர்களுக்கு வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் ஆகிய தேசிய விருதுகளை அரசமைப்புச் சட்டம் 18(1)பிரிவின்படி, விருதைப் பெறுபவர்கள் தங்களின் பெயருக்கு முன்னும், பின்னும் பயன்படுத்தக் கூடாது.

அவ்வாறு பயன்படுத்தினாலோ, தவறாகப் பயன்படுத்தினாலோ விருது பெற்றவர்களிடம் இருந்து விருதை அரசிடம் திரும்ப ஒப்படைக்கக் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். மேலும், தவறாகப் பயன்படுத்தியவர்களிடம் இருந்து விருதைப் பறிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. அவர்களின் பெயரையும் அரசின் பதிவேட்டில் இருந்து நீக்க முடியும்.இந்த விருதைப் பெற்றுக்கொண்டவர்களிடம் இந்த விருது குறித்து பெயருக்கு முன்போ, பின்போ சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்படுவார்கள்’’ என்று தெரிவித்தார்.

கடந்த 1955-ம் ஆண்டில் இருந்து இதுவரை 38 பேருக்கு பாரத ரத்னா விருதும், 307 பேருக்குப் பத்ம விபூஷண் விருதும், 1,255 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 3 ஆயிரத்து 5 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

click me!