கோச்சடையான் பட மோசடி வழக்கில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ரஜினிகாந்த்தை வைத்து, அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய திரைப்படம் 'கோச்சடையான்'. இப்படத்தை மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் முரளி என்பவர் தயாரித்திருந்தார். இப்படத்தை தயாரிப்பதற்காக முரளிக்கு ஆட் பீரோ நிறுவனத்தைச் சேர்ந்த, அபிர்சந்த் என்பவர் சுமார் ரூ.6.2 கோடி கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இப்படம் வெளியாகி மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்ததால், முரளியால் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியவில்லை.
கடன் வாங்கியபோது போடப்பட்ட ஒப்பந்தத்தின் ஆவணங்களில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்து போட்டதால், முரளி கடனாகப் பெற்ற தொகையை, லதா ரஜினிகாந்த் திரும்ப கொடுக்க வேண்டும் என ஆட் பீரோ நிறுவனத்தை சேர்ந்த, அபிர் சந்த் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 8 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த போலீசார், லதா ரஜினிகாந்த் மீது 196,199, 420, 463 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததோடு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கோச்சடையான் மோசடி: லதா ரஜினிகாந்த் கோர்ட்டில் ஆஜர் pic.twitter.com/7tIC46yQMk
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீது போடப்பட்ட வழக்குகளில் 196, 199, 420 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் அந்த 3 பிரிவுகளும் ரத்து செய்தது. பின்னர் அவர் மீதான 463 என்கிற பிரிவின் கீழ் உள்ள வழக்கை மட்டும் விசாரிக்கலாம் என நீதிமன்றம் கூறியது. இதையடுத்து இந்த வழக்கையும் தள்ளுபடி செய்யக் கோரி, லதா ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்துக்கு எதிரான மோசடி வழக்கை தொடர்ந்து பெங்களூரு நீதிமன்றமே விசாரிக்க அனுமதி கொடுத்தது. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற விசாரணையின் போது ஜனவரி 6-ந் தேதி அல்லது அதற்கு முன் பெங்களூரு கூடுதல் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் லதா ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும். இல்லையெனின் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி நேரில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் லதா ரஜினிகாந்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... நடிகை ரோஜாவுக்கு கிரிக்கெட் ஆட சொல்லிக்கொடுத்த முதல்வர்... முதல் பாலே சிக்சர் விளாசி அசத்திய வீடியோ இதோ