தலைமை நீதிபதிக்கு எதிராக போராட்டம் ! சின்மயிக்கு தடை போட்ட காவல் துறை !!

By Selvanayagam PFirst Published May 10, 2019, 8:03 PM IST
Highlights

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக தொடரப்பட்ட பாலியல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த பாடகி சின்மயிக்கு காவல் துறை தடை விதித்துள்ளது.
 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்சநீதி மன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாருக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது. 

அதன் அடிப்படையில், அந்தப் பெண்ணின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் வெளியே போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பெண் ஊழியர் கொடுத்த புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாடகி சின்மயி சென்னையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

மேலும் தனது போராட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், அவரது போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 12ம் தேதி போராட்டம் நடத்துவதற்கு பாடகி சின்மயி அனுமதி கேட்டிருந்ததாகவும், அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. 

click me!