
பாகுபலி 2வை பார்த்த பின் தியேட்டரிலிருந்து வெளியே வரும் ரசிகர்களின் ரியாக்ஷன் இப்படியாகத்தான் தெறிக்கிறது.
உலகெங்கும் வியாபித்திருக்கின்ற இந்திய சினிமா ரசிகர்கள் நகம் கடித்தபடி காத்திருந்த பாகுபலி 2 அநாயச அசத்தலுடன் ரிலீஸாகிவிட்டது. ஷாரூக், ரஜினி, சிரஞ்சீவி, அஜித் போன்ற தர மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு அவர்களின் வெறி ரசிகர்கள் அந்தந்த மாநிலங்களில் மிட்நைட் முதலே தியேட்டர் வாசலில் காத்திருந்து ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்ப்பதில் ஆச்சரியமில்லை.
ஆனால் அக்கிராஸ் தி இன்டியா ரசிகர்கள் இல்லாத இரண்டு ஹீரோக்களின் படத்துக்கு இப்படியொரு ஓப்பனிங் என்பது பிரபாஸ் மற்றும் ராணாவுக்கு கிடைத்த வெற்றியல்ல. இது முழுக்க முழுக்க ராஜமெளலி எனும் இயக்குநருக்கு கிடைத்த கெளரவ கிரீடம்.
சரி, பாகுபலி 2_க்குள் நுழைவோம். கதாபாத்திரங்களின் அறிமுகம், அந்தந்த மொழிக்கான ஷார்ப் டயலாக்ஸ், வண்ணம், அரங்கமைப்பு, போர்க்காட்சி வடிவமைப்பு, காதல் காட்சியிலும் இழையோடும் ராஜமெளலி ஸ்டைல் நகைச்சுவை, ஒவ்வொரு ஃபிரேமிலும் பொங்கி வழியும் பிரம்மாண்டம் என்று எதிலுமே குறை வைக்கவில்லை பாகுபலி 2. குறிப்பாக பாகுபலி 2வின் முதல் பாதி ஸ்டன்னிங்காக இருக்கிறது என்பதுதான் ஓவர் ஆல் ஒப்பீனியன்.
பாகுபலி என்றால் ‘மேன் வித் ஸ்ட்ராங் ஆர்ம்ஸ்’ என்று பொருள். அதாவது வலிமையான கரங்களுடைய மனிதன். இந்த பெயருக்கு தெறிக்க தெறிக்க நியாயம் செய்திருக்கிறார் பிரபாஸ். அறிமுக காட்சியில் ஆரம்பித்து எண்டு கார்டு போடும் வரை பிரபாஸின் ஆண்மை ஸ்கிரீன் நெடுக வியாபித்திருக்கிறது. அனுஷ்காவின் நெஞ்சத்தை கொள்ளை கொள்ள அவர் செய்யும் நகைப்பூட்டும் குறும்புகளாகட்டும், நீட்சியான க்ளைமேக்ஸில் ராணாவை ரத்தம் சிதற சிதற பொளந்து கட்டுவதாகட்டும் பின்னுகிறார் பிரபாஸ்.
ஹீரோவுக்கு வெகு இணையான வாய்ப்பு வில்லன் ராணாவுக்கு. பல்வாள்தேவனாக இளமை மற்றும் முதுமை எனும் இரு நிலைகளிலும் கடைந்தெடுத்த குரூரம் காட்டி அசத்துகிறார். பாகுபலி எனும் உக்கிரமான சக்தியுடைய நாயகனுக்கு இணையாக ஈடு கொடுக்கும் வில்லன் பாத்திரத்தை தெளிவாக தூக்கி சுமக்கிறார் ராணா.
பாகுபலி 1_ல் அலங்கோலமாக காட்சியளித்த அனுஷ்கா இங்கே அள்ள அள்ள அழகுடன் ஜொலிக்கிறார். தன்னை நோக்கி நகரும் ராணாவை வெட்டிப் பேசி தவிர்க்கும் இடங்களில் மதன் கார்க்கியின் வசனங்கள் அனுஷ்காவுக்கு கூரிய வாளாக கைகொடுக்கின்றன. மகிழ்மதிக்குள் அனுஷ்கா நுழையும் காட்சியில் வி.எஃப்.எக்ஸ். நின்று விளையாடியிருக்கிறது. சிம்பிளாக சொல்வதென்றால் தேவசேனா அனுஷ்கா ரசிகனின் நெஞ்சமெங்கும் வீரம் மற்றும் ஈரமாக நிறைகிறார்.
காம்பேக்ட் பியூட்டி தமன்னாவுக்கு பாகுபலி 1ல் இருந்த அளவுக்கு இடமில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு வருத்தமே. ஆனால் கிடைத்த இடத்தில் கில்லியாக கிளப்பியிருக்கிறார் அவந்திகாவாக வரும் தமன்னா.
கட்டப்பாவாக சத்யராஜ் செம கச்சிதம். அவர் ஏன் பாகுபலியை கொன்றார் என்கிற சர்வதேச புதிர் உடையும் சீன் ஒன்றே போதும், டிக்கெட்டுக்கு கொடுத்த காசு பக்காவாக வசூலாகிறது. இவரைப்போலவே ரம்யாகிருஷ்ணன், நாசர் என்று ஒவ்வொருவரும் நிறைந்து வாழ்ந்திருக்கிறார்கள்.
மரகத மணியின் இசை எக்ஸ்ட்ராடினரி. சில இடங்களில் பின்னணி இசைக்கு ஈடு கொடுக்க முடியாமல் காட்சிகள் சாதாரணப்பட்டு போகின்றன என்றால் யோசித்துக் கொள்ளுங்கள். போர்க்காட்சிகளுக்கென்று மரகதம் பிடித்திருக்கின்ற டியூன்கள் அநாயசம்.
ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமெண்ட்ஸ் என்று எல்லா ஜானர்களிலும் பிரம்மாண்டம் மற்றும் நிறைவின் உச்சத்தை தொட்டுப் படைக்கப்பட்டிருக்கும் பாகுபலி 2ஐ சிம்பிளாக விமர்சிப்பதென்றால்....
இது ஒரு சினிமேட்டிக் ஆர்கஸம்! ஆம். பாகுபலியை பார்க்கும்போது சினிமா ரசிப்புத்தன்மையின் உச்சநிலையை நீங்கள் அடையலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.