ஆட்டோ டிரைவர் கெட் - அப்போடு கராத்தேவை பாராட்டிய ரஜினி... இருவருக்கும் இப்படியொரு சீக்ரெட் பின்னணியா..?

By Thiraviaraj RMFirst Published Aug 29, 2019, 1:24 PM IST
Highlights

ரஜினியிடம் நெருக்கமாக இருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட சில நண்பர்கள்தான் மூப்பனாரிடம் கூட்டிப் போனார்கள்.

மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அவருடனேயே பாடிகாட் ஆக வலம் வந்தவர்கள் இருவர். ஒருவர் இப்போது அமமுகவில் இருக்கும் வெற்றிவேல். மற்றொருவர் கராத்தே தியாகராஜன். கராத்தே தியாகராஜனின் சொந்த ஊர் சென்னை. தஞ்சாவூர் முக்குலத்தை சேர்ந்த வெற்றிவேல் சிறு வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டார். கராத்தே தியாகராஜனும், வெற்றிவேலும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர்கள்.

நட்புறவோடு இருந்த இந்த இருவரும் தான் மூப்பனாருக்கு எல்லாமே. மூப்பனாருக்கு ரஜினி மீதும், இவருக்கு அவர் மீதும் ஏகப்பட்ட மரியாதை. அரசியலையும் தாண்டி அவ்வப்போது இருவரும் சந்தித்துக் கொள்வது வழக்கம். அப்படி சந்திப்பு நேர்கையில் ரஜினியோடு நெருக்கமானார் கராத்தே தியாகராஜன். கராத்தே தியாகராஜனுக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாட்ஷா படப்பிடிப்பில் இருந்தார் ரஜினி. ஆனாலும் கராத்தே மீதுள்ள நட்பால் பாட்ஷா பட கெட் அப்பான ஆட்டோ டிரைவர் கெட் -அப்போடு திருமணத்தில் கலந்து கொண்டு கராத்தே தம்பதியரை வாழ்த்தினார். 

அடுத்து பாட்ஷா படம் 1995ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அப்போது தான் ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் முட்டல் மோதல் உருவானது. அப்போது ரஜினியிடம் நெருக்கமாக இருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட சில நண்பர்கள்தான் மூப்பனாரிடம் கூட்டிப் போனார்கள். மூப்பனாரும், ப.சிதம்பரமும் அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம் ரஜினியை அழைத்து போனதாகவும் சொல்லப்பட்டது. 

அடுத்து தேர்தல் வந்த போது காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், இதனை விரும்பாத மூப்பனார் காங்கிரஸ் கட்சியை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கினார். திமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது தமாகா. மூப்பனார் மீதுள்ள மரியாதையால் அந்தத் தேர்தலில் வாய்ஸ் கொடுத்தார் ரஜினி. அந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றது தமாகா. திமுக ஆட்சியமைத்தது. 

அதன் பிறகு தமாகா சார்பில் கராத்தே தியாகராஜன் சென்னை துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து மூப்பனார் மறைவுக்கு பிறது வெற்றிவேல் சசிகலா கோஷ்டியை பிடித்து அதிமுகவுக்கு தாவினார். கராத்தே தியாகராஜன் தாய் கழகத்தில் ஐக்கியமானார்.  ஆனாலும் ரஜினியோடு இருந்த நட்பு அப்படியே தொடர்கிறது. கராத்தே தியாகராஜனை அழைத்து அவ்வப்போது சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். 

கடந்த 26 ஆண்டுகளாக ரஜினி - கராத்தே தியாகராஜன் நட்பு தொடர்கிறது. கராத்தே, ரஜினியுடன் நெருக்கமாக பழகுவதை வைத்தே மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மேலித்தில் போட்டுக் கொடுத்து கராத்தே தியாகராஜனை கட்சியை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்தால் கராத்தேவுக்கு அந்தக் கட்சியில் முக்கிய பொறுப்பு உண்டு. பின்னே 26 ஆண்டுகால நட்பாயிற்றே ரஜினியோ, கராத்தேவோ விட்டுக் கொடுப்பார்களா..?   

click me!