நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனான, ராம்குமார் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரரான அக்ஷன் சரின் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் துஷ்யந்தின் மனைவி அபிராமி மீது செக் மோசடி புகார் ஒன்றை தொடர்ந்தார்.
இந்த புகார் மனுவில், ராம்குமாரின் மகன் துஷ்யந்தின் மனைவி அபிராமிக்கு தொடர்புள்ள, ஈசன் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் வர்த்தகத் தொடர்பு மேற்கொண்டதாகவும், அப்போது கடந்த 2019 ஆம் ஆண்டு துஷ்யந்த் சார்பில் ரூபாய் 15 லட்சத்திற்கான இரண்டு காசோலைகள் வழங்கப்பட்டதாகவும், வங்கியில் இந்த காசோலையை செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
வங்கியில் பணம் இல்லை என்று தெரிந்தும் எங்களுக்கு காசோலை அளித்தது தொடர்பாக அவருக்கு நோட்டஸ் அனுப்பியும், எவ்வித பதிலும் அளிக்காததால் பணத்தை திருப்பித் தர வேண்டும் என கூறியபோதும் அதற்க்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே துஷ்யன் மீதும் அவரது மனைவி அபிராமி மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. மேலும் மகன் தரவேண்டிய பணத்திற்கு அவருடைய தந்தையான ராம்குமார் பொறுப்பேற்காததால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துஷ்யந்த் அவருடைய மனைவி அபிராமி மற்றும் ராம்குமார் ஆகிய மூவருக்கும் பிடி ஜாமினில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.