லால் சலாம் படத்தில் இடம்பெறும் திமிறி எழுடா பாடலுக்காக மறைந்த பாடகர்கள் இருவரின் குரலை AI மூலம் பயன்படுத்தி அசத்தியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
லால் சலாம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவை பாராட்டி பேசினார். இந்த இசை வெளியீட்டு விழாவில் லால் சலாம் பட பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டன.
இதையும் படியுங்கள்... நான் சொன்ன காக்கா விஜய் அல்ல... சும்மா சில்லு சில்லுனு பேசி சர்ச்சைகளுக்கு சவுக்கடி கொடுத்த ரஜினிகாந்த்
அந்த வகையில் இதில் இடம்பெற்றுள்ள திமிறி எழுடா என்கிற பாடலை மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது பாடி உள்ளதாக குறிப்பிட்டு இருந்தனர். இதில் பம்பா பாக்யா மரணமடைந்து ஓராண்டாகிறது. அதேபோல் சாகுல் ஹமீது மறைந்து கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் ஆகிறது. அப்படி இருக்கையில் அவர்களது குரலில் இந்த பாட்டு எப்படி சாத்தியம் என்பது தான் அனைவரது கேள்வியாக இருந்தது.
அதனை தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியமாக்கி காட்டி இருக்கிறார் ரகுமான். இன்று டிரெண்டிங்கில் உள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் குரலை லால் சலாம் பட பாடலுக்கு பயன்படுத்தி புது டிரெண்டை உருவாக்கி இருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். அவரின் இந்த முயற்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதனை இனி வரும் காலங்களில் பல்வேறு இசையமைப்பாளர்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... "அப்பாவை சங்கி என்று சொல்லும்போது கோவம் வரும்".. லால் சலாம் ஆடியோ லாஞ்சு - உணர்ச்சிவசமாக பேசிய ஐஸ்வர்யா!