மன்னிப்பு என் நிஜவாழ்க்கையிலும் பிடிக்காத வார்த்தை... எடப்பாடியை உரசிப்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

By vinoth kumarFirst Published Nov 29, 2018, 5:08 PM IST
Highlights

நிஜ வாழ்க்கையிலும் மன்னிப்பு கேட்க முடியாது! என்று தன் வக்கீல் மூலமாக சொல்லியனுப்பியிருப்பதோடு, அரசின் திட்டங்களை உரசும் காட்சிகளை இனி வைக்கமாட்டோம் என்று உத்தரவாதமெல்லாம் கொடுக்க முடியாது! என்று ஓப்பனாக அவர் அடித்து நொறுக்கியிருப்பது, தங்களை அநியாயத்துக்கு உரசும் செயலாகவே பார்க்கிறது தமிழக அரசு.

சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் ’சர்கார்’ திரைப்படத்தில், அரசின் இலவச திட்டங்களில் துவங்கி அ.தி.மு.க. அரசின் மக்கள் நல திட்ட குறைபாடுகள் வரை அத்தனையயும் தோலுரித்து தொங்கவிட்டு துவம்சம் செய்திருந்தனர். 

இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்த படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு எதிராக வழக்கும் பதிவானது. இதில் முருகதாஸ் முன் ஜாமீனுக்கு விண்ணப்பித்தார். கடந்த 27-ம் தேதி வரை முருகதாச் கைதுக்கு தடைவிதிக்கப்படிருந்தது. 

இந்நிலையில்  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “அரசின் கொள்கைகளை விமர்சிக்க கூடாது. அரசின் திட்டங்களை விமர்சனம் செய்ததற்காக இயக்குநர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் கூறினார். ஆனால் இதற்குப் பதிலளித்த முருகதாஸின் வழக்கறிஞர் விவேகானந்தன், “அரசு திட்டங்களை விமர்சிப்பது போன்ற காட்சிகளை வைப்பது இயக்குநரின் கருத்து சுதந்திரம். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. 

படங்களில் இது போன்ற காட்சிகளை வைக்க மாட்டோம் என்று உத்தரவாதமும் தர முடியாது.” என்றார். முருகதாஸ் தனது பிளாக் பஸ்டர் திரைப்படமான (திருட்டு கதை விவகாரத்தில் சிக்கிய கதைதான்) ரமணாவில் ‘தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை...மன்னிப்பு! என்று டயலாக் வைத்தார். பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய பஞ்ச் டயலாக் அது. 

இந்நிலையில் தன் நிஜ வாழ்க்கையிலும் மன்னிப்பு கேட்க முடியாது! என்று தன் வக்கீல் மூலமாக சொல்லியனுப்பியிருப்பதோடு, அரசின் திட்டங்களை உரசும் காட்சிகளை இனி வைக்கமாட்டோம் என்று உத்தரவாதமெல்லாம் கொடுக்க முடியாது! என்று ஓப்பனாக அவர் அடித்து நொறுக்கியிருப்பது, தங்களை அநியாயத்துக்கு உரசும் செயலாகவே பார்க்கிறது தமிழக அரசு.

click me!