ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து... விசாரணையை சந்திக்க தயார் என வைரமுத்து உறுதி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 28, 2021, 7:07 PM IST
Highlights

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிட்டதற்காக பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  மனுவை கவிஞர் வைரமுத்து திரும்ப பெற்றுக் கொண்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து, தமிழ் நாளிதழில் கட்டுரை எழுதியிருந்தார். அதில், பெண் தெய்வம் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  சமுதாய நல்லிணக்க பேரவையைச் சார்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி  கவிஞர் வைரமுத்து  உயர்நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில், ஆண்டாள் குறித்த கருத்து தன்னுடைய கருத்து அல்ல எனவும்,  அமெரிக்க எழுத்தாளர் கருத்தை தாம் சுட்டிகாட்டி இருந்ததாகவும் கூறியிருந்தார்.

தவறான கருத்துகள் எதையும்  குறிப்பிடவில்லை எனவும்,  மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவோ கருத்து தெரிவிக்கவில்லை எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு விசாரித்த உயர்நீதிமன்றம், வைரமுத்துவிற்கு எதிராக சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

 இந்நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி வைரமுத்து தாக்கல் செய்திருந்த மனு,   நீதிபதி தண்டபாணி முன் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை திரும்ப பெறுவதாகவும், புகாரின் விசாரணை சந்திப்பதாகவும் தெரிவித்தார். இதை ஏற்று  வைரமுத்து மனுவை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

click me!