அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல்நலக் குறைவு !! ஐசியூவில் அனுமதி !!

By Selvanayagam PFirst Published Oct 18, 2019, 8:11 AM IST
Highlights

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

கடந்த, 1969ல் ஹிந்தி படங்களில் நடிக்கத் துவங்கிய, அமிதாப் பச்சன், பல்வேறு படங்களில், ஆக்ரோஷமான இளைஞர் வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர். 'ஜன்ஜீர், ஷோலே, தீவார், திரிசூல், டான், காலா பத்தர்' உள்ளிட்ட படங்கள் அவரை, பாலிவுட்டின் மிகப் பெரிய ஹீரோவாக உயர்த்தியது. 

கடந்த, 1984ல், சினிமாவில் இருந்து விலகி, தனது நண்பரான, காங்கிரஸ்  முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி  விருப்பப்படி, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அப்போது, 68.2 சதவீத ஓட்டுகள் பெற்று, உத்தர பிரதேசத்தின் அலகாபாத் தொகுதியில் வென்றார். ஆனால், மூன்று ஆண்டுகளில், மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார்.

தனியார் தொலைக்காட்சியில் இவர் நடத்தி வரும், 'கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இவருடைய மனைவியான, முன்னாள் நடிகை ஜெயாபச்சன், தற்போது, எம்.பி.,யாக உள்ளார். இவருடைய மகன், அபிஷேக்பச்சனும், மருமகள், ஐஸ்வர்யா ராயும், பிரபல திரை நட்சத்திரங்கள். அமிதாப், மூன்று முறை தேசிய திரைப்பட விருதுகள், 12 பிலிம் பேர் விருதுகள் பெற்றுள்ளார்.

கடந்த 1982ல் நடந்த ஒரு விபத்தின் போது, அமிதாப்புக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் 'ஹெப்பாடிடீஸ் பி' வைரஸ் இருந்துள்ளது. இந்த ரத்தம் அவருக்கு ஏற்றப்பட்டதன் விளைவாக, அவரது கல்லீரல் 75 சதவீதம் செயல் இழந்தது. 

அன்று முதல் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாலும் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்  சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து  கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

click me!