
நடிகர் ரஜினியை ஒரே நேரத்தில் அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அஜித் – சிவா கூட்டணியில் விஸ்வாசம் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. தீபாவளிக்கு விஸ்வாசம் படத்தை வெளியிட முயற்சி நடைபெற்ற நிலையில் சூட்டிங் துவங்க தாமதம் ஆனதால் பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதனால் அஜித் ரசிகர்கள் பொங்கலுக்கு விஸ்வாசம் படம் வெளியாகும் என்று வெறித்தனமாக காத்திருந்தனர்.
அதிலும் தீபவாளிக்கு வெளியான சர்கார் முதல் நாள் தொடங்கு தற்போது வரை தாறுமாறாக வசூலை குவித்து வருகிறது. பொங்கலுக்கு விஸ்வாசம் வெளியாவதன் மூலம் சர்கார் சாதனைகளை அஜித் தவிடுபொடியாக்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதே போல் கடந்த பொங்கலுக்கு சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் வெளியானது. இந்தி படத்தின் ரீமேக்கான தானா சேர்ந்த கூட்டம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தீபாவளி விருந்தாக செல்வராகவன் – சூர்யா கூட்டணியின் உருவாகி வரும் என்.ஜி.கே வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால் படப்பிடிப்பை வழக்கம் போல் செல்வராகவன் நீட்டித்து கொண்டே சென்றதால் அதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. இதனால் சூர்யாவின் என்.ஜி.கே தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தான் திடீரென ரஜினியின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே அஜித் – சூர்யா படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பேட்ட படமும் அன்றே வெளியாகும் என்கிற அறிவிப்பு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஹீரோக்கள் படத்தை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தி வருகிறது.
ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தால் அஜித் – சூர்யா படங்கள் ரிலீசுக்கு நாள் குறித்திருந்தன. இந்த நிலையில் ரஜினியின் பேட்ட படமும் தீபாவளி ரேசில் இறங்கியது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஒரு படத்தின் வசூல் என்பது அந்த படம் எத்தனை திரையரங்கில் வெளியாகிறது என்பதை பொறுத்தது ஆகும். ஒரு பெரிய ஹீரோவின் படம் வெளியானால் அன்றைய தினம் அனைத்து திரையரங்குகளும் அந்த படத்தை வெளியிட்டு வசூலை அள்ளுவது வழக்கம்.
ஆனால் இரண்டு ஹீரோக்கள் படம் ஒரே நாளில் ரிலீசானால் திரையரங்குகள் பாதியாக பிரிக்கப்பட்டு வசூல் பாதிக்கப்படும். அதே மூன்று ஹீரோ என்று எடுத்துக் கொண்டால் சொல்லவே வேண்டாம். ஆனால் பேட்ட, விஸ்வாசம், என்.ஜி.கே என மூன்று படங்கள் பொங்கல் ரிலீசுக்கு தயாரானாலும் திரையரங்க உரிமையாளர்கள் பேட்ட படத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனென்றால் ரஜினி படம் பண்டிகையன்று வெளியாகி பல வருடங்கள் ஆகிறது.
பண்டிகைக்கு ரஜினி படம் வெளியானால் வசூலை வாரிக்குவிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. எனவே விஸ்வாசம், என்.ஜி.கே ரிலீசை தள்ளிப்போடுமாறு விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தற்போதே பேச ஆரம்பித்துள்ளனர். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை பகைத்துக் கொண்டு வேறு படங்களை திரையிடவும் திரையரங்க உரிமையாளர்கள் முன்வரமாட்டார்கள் என்கிறார்கள். இதனால் பொங்கலுக்கு விஸ்வாசம் மற்றும் என்.ஜி.கே வெளியாவது சந்தேகம் என்று கூறுகிறார்கள்.
இதனால் தான் அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் ரஜினியை சீண்டி வருகின்றனர். ஜூன் மாதம் காலா, நவம்பர் மாதம் 2.0 பிறகு ஜனவரியில் பேட்ட என்றால் எப்படி? எங்கள் தலைவர்கள் படம் எல்லாம் ரிலீஸ் ஆக வேண்டாமா? என்று அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.