
இந்தப் படத்தில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, பாலிவுட் நடிகர் சமீர் கோச்சார் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக 'அதோ அந்த பறவை போல' உருவாகியுள்ளது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து, தற்போது ரிலீசுக்கு ரெடியாகியிருக்கும் இந்தப் படத்தை, பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரின் லிப்ரா ப்ரொடக்ஷன் நிறுவனம் வெளியிடுகிறது. கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியான 'அதோ அந்த பறவை போல' படத்தின் டீசர், சமூக வலைதளங்களில் அசத்தலான வரவேற்பை பெற்றது.
அத்துடன் படம் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், படத்தின் ரிலீசுக்கு நாள் பார்த்து வந்த படக்குழு, புத்தாண்டு கொண்டாட்டத்தை குறிவைத்து 'அதோ அந்த பறவை போல' படம் வரும் டிசம்பர் 27ம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது மகிழ்ச்சியான அறிவிப்புதானே! இதுல படம் சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் எப்படி எழுகிறது என நீங்கள் கேட்பது புரிகிறது.
அதற்கு காரணம், லிப்ரா ப்ரொடக்ஷனின் ராசி அப்படி. பிக்பாஸ் கவின் நடிப்பில் நட்புன்னா என்னனு தெரியுமா? படத்தை தயாரித்திருந்தது இந்நிறுவனம்தான். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை பலமுறை மாற்றி மாற்றி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக கடந்த மே மாதம்தான் படத்தை ரிலீஸ் செய்தது.
இதனைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்ட 'மிக மிக அவசரசம்' படத்தை வாங்கிய லிப்ரா ப்ரொடக்ஷன் நிறுவனம், கடந்த அக்டோபர் மாதமே படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்தது.
ஆனால், போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் அறிவித்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அமைச்சர்களின் தயவால் கடந்த நவம்பர் 8ம் தேதிதான் 'மிகமிக அவசரம்' படத்தை வெளியிட்டது.
லிப்ரா ப்ரொடக்ஷன் நிறுவனம் வெளியிட்ட சிறிய பட்ஜெட் படங்களுக்குதான் இந்த பிரச்னை என பார்த்தால், 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' படத்துக்கும் இது தொடர்ந்ததுதான் ஆச்சரியம்.
முதல்முறையாக ஸ்டார் வேல்யூ உள்ள, மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி ஆச்சரியப்படுத்திய லிப்ரா ப்ரொடக்ஷன் நிறுவனம், படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்தது. இதனால், விஜய், கார்த்தி படங்களுக்கு போட்டியாக விஜய்சேதுபதியின் படமும் களமிறங்கவுள்ளது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், கடைசியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் பின்வாங்கிய இந்நிறுவனம், இறுதியாக, நவம்பர் 15ம் தேதி 'சங்கத்தமிழன்' ரிலீஸ் என அறிவித்தது. ஆனால், நீதிமன்றத் தடை உட்பட பல பிரச்னைகளில் சிக்கியதால் கடைசி நேரத்தில் 'சங்கத்தமிழன்' திரைக்குவராமல் ஏமாற்ற, பின்னர் ஒருவழியாக பிரச்னைகள் தீர்ந்து, பல இடங்களில் அன்றைய தினம் இரவுதான் படம் ரிலீஸ் ஆனது.
இப்படி, லிப்ரா ப்ரொடக்ஷன் நிறுவனம் வெளியிடும் எந்தப் படங்களும் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாது என்பதுதான் ஹிஸ்டரியாக உள்ளது. இந்த மோசமான ஹிஸ்டரியில் இடம்பெறாமல் அமலாபாலின் 'அதோ அந்த பறவை போல' படம் தப்புமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.