கன்னட திரையுலகில் கடந்த 1997ஆம் ஆண்டு 'நாகமண்டலா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. பின் தமிழில் 'பூந்தோட்டம்' என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து கன்னடத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார்.
கன்னட திரையுலகில் கடந்த 1997ஆம் ஆண்டு 'நாகமண்டலா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. பின் தமிழில் 'பூந்தோட்டம்' என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து கன்னடத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார்.
தமிழில் இவர் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த 'பிரண்ட்ஸ்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததால், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து 'கலகலப்பு', 'ராமச்சந்திரா', 'மிலிட்டரி', 'சூரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
கடைசியாக இவர் தமிழில் 'மீசைய முறுக்கு' படத்தில், ஹிப்பாப் ஆதிக்கு அம்மாவாக நடித்திருந்தார். மேலும் 'நந்தினி' திகில் தொடரிலும் நடித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருடைய சகோதரி தன்னுடைய அக்கா மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறிய நிலையில், பல கன்னட நடிகர்கள் இவருக்கு உதவி கரம் நீட்டினார்.
இந்நிலையில் மீண்டும் தான் கஷ்டப்பட்டு வருவதாகவும், தமிழ் பெண் என்பதால் கன்னட திரையுலகினர் புறக்கணிப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் பெங்களூரில் உள்ளேன். இங்கு வந்து இரண்டு படங்களில் நடித்தேன். பின் கன்னட 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வற்புறுத்தினர். ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி வந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்.
தற்போது தன்னுடைய உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக அனுமதிக்கப்பட்டு இருந்தேன். நடிகர் சுதீப் உதவினார். இதற்கிடையில் உடல்நிலை மோசமாகி அங்கிருந்து வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அப்போது ரவிப்பிரகாஷ் என்கிற கன்னட நடிகர் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். அதனை காரணம் காட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதனால் அவர் மீது புகார் கொடுத்தேன். ஆனால் அந்த புகார் ஏற்றுக்கொள்ள பட வில்லை.
இதையடுத்து பல தவறான தகவல்கள் என்னை பற்றி பரவியது. இப்போது நான் தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் கஷ்டப்படுகிறேன். இரண்டு வாரத்திற்கு முன் என்னை கைது செய்வதற்கு முயன்றனர், தமிழ் பெண் என்பதால் என்னை அதிகம் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். புகாரை கூட கன்னடத்தில் எழுதி வரும்படி நிர்ப்பந்திக்கின்றனர் என விஜயலட்சுமி கூறியுள்ளார்.
மேலும் தான் மீண்டும் சென்னை திரும்ப வேண்டும் என்றும், தான் பட்ட ஒரு லட்ச ரூபாய் கடனை திருப்பித்தர, தமிழ் திரையுலகினர் தனக்கு உதவி செய்ய வேண்டுமென விஜயலட்சுமி அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும் இங்குள்ள கன்னட நடிகர்கள், போலீசார், வழக்கறிஞர்கள் என அனைவரும் தன்னை தமிழ் பெண் என்கிற ஒரே காரணத்துக்காக சிரமப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.