இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் கலந்து கொண்ட படத்தின் நடிகை சுஹாசினி திருமணமான புதிதில் விருந்துக்கு சென்றபோது நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் "தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தின் விழாவில் நடிகை சுஹாசினி திருமணமான புதிதில் விருந்துக்கு சென்றபோது நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை சுஹாசினி மணிரத்னம் பேசும்போது, இந்த விழாவிற்கு கண்ணன் அழைக்கும்போது, அவர் அழைத்து எப்படி வராமல் இருப்பேன் என்று ஒப்புக் கொண்டேன். இப்போது இருக்கும் புது இயக்குநர்கள் அனைவரும் இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு காட்சியை 12 நாட்கள் படப்பிடிப்பு எடுக்கும்போது, ஒரு படத்தையே 12 நாட்களிலேயே எடுத்து விடுகிறார்.
சென்னையில் நல்ல ரசனையான நிகழ்ச்சி நடந்தால் நிச்சயம் போய் பாருங்கள். அப்போது தான் நாம் வளர முடியும். எனக்கு திறமை இருக்கிறது என்று நினைக்காமல் எல்லாவற்றையும் போய் பாருங்கள், கற்றுக் கொள்ளுங்கள். மெட்ராஸ் டாக்கீஸ் குழுவில் நகைச்சுவை வேண்டுமென்றால் கண்ணனை கூப்பிடுங்கள் என்று தான் கூறுவோம்.அந்த அளவு நகைச்சுவை உணர்வு கொண்டவர். அப்படி பட்ட அவர் இந்த சீரியசான படத்தையும் அருமையாக எடுத்துள்ளார்.
ஐஸ்வர்யாவை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான், ரேவதி போன்றோர்கள் நீண்ட காலமாக திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஐஸ்வர்யாவை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தெலுங்கில் நான் முன்னணி நடிகையாக இருந்ததற்கு இயக்குநர் தான் காரணம். அந்த காலத்திலேயே பெண்களை புரிந்து கொண்ட இயக்குநர்கள் கே.பாலசந்தர் சாரும் தான்.
கண்ணனுக்கு இதுபோன்ற படம் எடுக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியதற்கு வாழ்த்துகள். கேரளாவில் விருது குழுவில் இடம் பெற்ற 9 பேர்களில் நான் ஒருவள் தான் பெண். அவர்களிடம் சண்டையிட்டு இதுதான் சிறந்த படம் என்று பார்க்க வைத்தேன். நான் மணியை திருமணம் செய்துகொள்ளும்போது ரூ.15 ஆயிரம் தான் இருந்தது. அவர் 5 படங்கள் தான் இயக்கியிருந்தார். நான் 90 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். இந்த நிலையில் நண்பர் வீட்டிற்கு விருந்திற்கு சென்றிருந்தோம். அங்கு புதிதாக திருமணமான மணப்பெண்ணான எனக்கு இறுதியாகத்தான் உணவு பரிமாறினார்கள். முதலில் ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டும் என்கிற சம்பிரதாயம். அதுவும் சமையலறையில் தான் கொடுத்தார்கள். எனக்கு சினிமா பார்ப்பது போல அதிர்ச்சியாக இருந்தது. காலம் மாறவே மாறாதா என்று அன்று தோன்றியது.
பள்ளியில் படிக்கும்போது அம்பை என்று எழுத்தாளர். அவர் ஒரு புத்தகம் எழுதினார். அந்த கதையில் அவர்கள் வீட்டில் தயாரிக்கும் தோசையின் சுவை போன்று வேறு எங்கும் கிடைக்காது. சமையலறை மூலையில் ஏன் இவர்கள் இருக்க வேண்டும் என்று பாலசந்தரும் சிந்தித்தார். பெண்களின் சமையலறை நேரத்தை குறைப்பதற்காக ராமகிருஷ்ணன் ஓப்போஸ் குக்கிங் தொடங்கி இருக்கிறார். இவர்களைப் போன்ற மனிதர்களைப் பார்க்கும் போது தான் நம்பிக்கை வருகிறது.
எனக்கு கிடைத்த அனுபவம் என் வீட்டிற்கு வரும் பெண்ணிற்கு கிடைக்க கூடாது. என்னுடைய வீட்டிற்கு வரும் புது மணப்பெண்ணிற்கு நானோ அல்லது எனது கணவரோ தான் முதலில் பரிமாற வேண்டும் என்று எண்ணுகிறேன். இந்த படம் நிச்சயம் எல்லோரிடமும் மாற்றம் கொண்டு வரும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.