அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் என்று நடிகர் விஜய் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது.
இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் சுமார் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
விழாவை ஒட்டி, மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் நேற்று சென்னை அருகே வந்து தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 7:30 மணி முதலே மாணவர்களும் பெற்றோர்களும் மண்டபத்திற்கு வருகை தரத்தொடங்கியுள்ளனர். விஜய் 10:30 மணிக்கு மேல் வந்தார்.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது வணக்கம். நான் நிறைய இதுபோன்ற ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன்.
இதுபோன்ற கல்வி நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு ஏதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப்போல் உணர்கிறேன். நான் பள்ளியில் ஒரு சாதாரண மாணவன் தான். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களை பார்க்கும் போது என் பள்ளி காலங்களை நினைவு கூர்கிறேன். சமீபத்தில் ஒரு படத்தின் வசனம் என்னை மிகவும் பாதித்தது. காடு வச்சிருந்தா எடுத்துக்குவானுக, காசு வச்சிருந்தா புடுங்கிக்குவானுக, ஆனால் படிப்ப மட்டும் யாரும் எடுக்க முடியாது.. என்று வசனம் வரும்.
கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக என் மனதில் இருந்து வந்தது. அது இன்று நிறைவேறி இருக்கிறது. நாளைய வாக்காளர்களான நீங்கள் தான் ஓட்டுபோட்டு புதிய நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். நம் கைகளைக் கொண்டு நம் கண்களை குத்தும் செயல் நடக்கிறது. காசு வாங்கி கொண்டு வாக்கு செலுத்துகிறோம். ஒரு தொகுதியில் 15 கோடி ரூபாய் செலவு செய்தால் அதற்கு முன்பு அவர் எவ்ளோ சம்பாதித்து இருப்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
பணம் கொடுப்பவர்கள் தோல்வியடைந்தால், அது நீங்கள் கொடுக்கும் பரிசு. பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று மாணவ, மாணவிகள் பெற்றோரிடம் கூற வேண்டும். பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார் நடிகர் விஜய்.